சர்வதேச அமைப்புடன் ஆய்வு.. முதியோர் நலனுக்காக தமிழக அரசின் புதிய திட்டம்
முதியவர்களின் நலன் காக்க சர்வதேச அமைப்புடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக அரசு, முதியோர் ஆதரவு மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
கூட்டுக் குடும்பமாக இருந்த காலம் மாறி தனிக் குடும்ப முறையை அனைவரும் நாடிச் செல்லும் காலம் இது. உடலில் உழைக்கும் சக்தி இருக்கும் வரை வருமானம் ஈட்டி கொடுத்தவர்கள், ஓய்வு பெரும் காலத்தில் இந்த சமூகத்தினரால் கைவிடப்படுவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இப்படி தனித்துவிடப்படும் ஆதரவற்ற முதியவர்களை கவனிப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்துள்ள தமிழக அரசு, அவர்களின் நலன் காக்க புதிய முயற்சிகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
முதியோர் நலன் காக்க சர்வதேச அளவில் செயல்படும் வறுமை ஒழிப்பு நடவடிக்கை மையமான J-PAL அமைப்புடன் இணைந்து தமிழக அரசு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. தமிழத்தின் சமூக - பொருளாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக J-PAL அமைப்புடன் 2014-ஆம் ஆண்டு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, அந்த அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ தலைமையிலான குழு, தமிழகத்தில் முதியோர்கள் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக நீண்ட கால ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் முதியோர் நல திட்டங்களை தமிழக அரசு தொடங்க உள்ளதாக நடப்பு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோட்டமாக தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் தலா 2 வட்டாரங்களில் 37 லட்சம் ரூபாய் செலவில் முதியோர் ஆதரவு மையங்களை அரசு தொடங்க உள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
உதவித் தொகை, இலவச பேருந்து பயணச் சீட்டு என முதியோருக்கான உதவிகளை தொடர்ந்து செய்து வரும் தமிழக அரசு, கைவிடப்பட்ட முதியவர்களுக்கு கைகொடுக்கும் முதியோர் ஆதரவு மையங்களை விரைந்து அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.