“உதவி செய்வதை தடுப்பது அரசின் நோக்கம் அல்ல” - தமிழக அரசு விளக்கம்
கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வறுமையில் வாடும் பல ஏழைகள் உணவுக்கே வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தங்களால் முடிந்த நிவாண நிதியை அரசுக்கு அளிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி சினிமா பிரபலங்கள் உட்பட பலர் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் அன்றாட ஏழைகளுக்கு உதவும் வகையில் உணவுப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களை ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.
ஆனால், வறுமையில் வாடும் ஏழைமக்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு தனியார் அமைப்புகள், நபர்கள், கட்சிகள் போன்றவை நேரடியாக உதவி செய்யக்கூடாது என தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னார்வலர்களுக்கு தடை விதித்தது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு தன்னார்வலர்கள் நேரடியாக உதவ கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் யாருக்கும் தடை விதிக்கவில்லை. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயலாற்றும் படி அறிவுறுத்தல் மட்டுமே. நோய் பரவும் சூழலை கருத்தில் கொண்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் உதவும் விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர்கள் கூறுவது போல் அரசியல் செய்யவில்லை.
தற்போதைய சூழலில் தன்னார்வலர்கள் நேரடியாக உதவி செய்வது தொற்று நோயை அதிகரிக்கவே செய்யும். தன்னார்வலர்கள் உதவும் போது தொற்று அதிகமாகும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. தன்னார்வலர்கள் அரசிடம் ஒப்படைத்தால் வருவாய் துறை மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும். புயல் காலங்களில் உதவுவது போல் தற்போது உதவி செய்தால் நோய் தொற்று அதிகமாகும். அரசின் நோக்கம் உதவி செய்வதை தடுப்பது அல்ல” எனத் தெரிவித்துள்ளது.