``தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதிகம் செய்யப்பட வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின்

``தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதிகம் செய்யப்பட வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின்
``தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புகள் அதிகம் செய்யப்பட வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின்

ஏ எஸ் பன்னீர்செல்வன் எழுதிய `கலைஞர் மு.கருணாநிதி வரலாறு' மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய `திராவிடமும் சமூக மாற்றமும்' என்ற இரண்டு நூல்களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிப்பெயர்ப்பு அதிகம் செய்யப்பட வேண்டும்” என பேசினார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு ஏ எஸ் பன்னீர்செல்வன் எழுதிய கலைஞர் மு கருணாநிதி வரலாறு மற்றும் ஜெயரஞ்சன் எழுதிய திராவிடமும் சமூக மாற்றமும் என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, தொழிநுட்பத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட கழக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஏ எஸ் பன்னீர் செல்வன் எழுதிய கலைஞர் மு கருணாநிதி வரலாறு நூலை வெளியிட்டார் முதல்வர். அதை நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார். இந்த நூலை சந்தியா நடராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

ஜெ ஜெயரஞ்சன் எழுதிய திராவிடமும் சமூக மாற்றமும் என்ற நூலை முதலமைச்சர் வெளியிட்டார். அதை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், “தமிழ்நாட்டிற்கு தேவையான மாபெரும் அறிவு புத்தகங்களை வெளியிட்டு உள்ளேன். இந்தியாவின் தலை சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான பன்னீர் செல்வம் எழுதிய நூல், தலை சிறந்த பொருளாதார நிபுணர் எழுதிய நூல் இன்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் அறிவு கருவூலங்கள். தலைவர் கலைஞருக்கு நெருக்கமாக இருந்தவர் பன்னீர் செல்வன், ஜெயரஞ்சன் பற்றி சொல்ல வேண்டியதில்லை செய்தி தொலைக்காட்சி வாயிலாக திராவிடத்தை குறை கூறியவர்கள் சொற்களை வாங்கி அவர்கள் மீதே எரியும் வித்தைக்காரர். திமுகவின் மாபெரும் கேடயம். பன்னீர் செல்வன் ஆங்கிலத்தில் எழுதிய நூலை சந்தியா நடராஜன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

கலைஞர் குறித்து எவ்வளவோ நூல்கள் உள்ளன அதில் இந்த நூல் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர் செயல்பட்டது குறித்தும், அண்ணா நினைவிடத்தில் தான் தனக்கும் இடம் வேண்டும் என்று சொன்னது இந்த நூலில் வருகிறது. அந்த இடத்தை பெற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்ணுக்கு முன் வருகின்றன. கலைஞர் பற்றிய நூல்களில் இருந்து வேறுபட்டதாக பன்னீர் செல்வத்துடன் பேசும் பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. அதில், ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கை உள்ளது.

பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, ரகசிய வாழ்க்கை என்றும் அதற்கு அரசியலில் இருப்பவர்களுக்கு நான்காவதாக வாழ விரும்பிய வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. அது அவர்கள் எழுத்துக்களில் வெளிப்படும் என்று கலைஞர் சொல்லி உள்ளார். நீங்கள் வாழ நினைத்த வாழ்க்கை எது என்ற கேள்விக்கு கலைஞர் அதை நீயே கண்டுபிடித்துகொள் என்று சொல்லி இருக்கிறார். அதன் படி அவர் வாழ விரும்பிய வாழ்க்கை அவர் போன பின்பும் இருக்க வேண்டும். அது இப்போது நிகழ் காலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

`கல்வி, தொழில் , உட்கட்டமைப்பு மட்டுமல்ல சமூக நிதியில் சிறந்து விளங்க வேண்டும். சுய மரியாதை, சமதர்ம அரசியலை என்றும் உயர்த்தி பிடிப்போம்’ என்று பேசினார். உங்கள் அறிவிப்பணியை அதே வீரியத்துடன் தொடர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மேடையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “உலகத்தில் உள்ள மிகப்பெரிய நூலகமான அர்ஜென்டினா நூலகத்தை, சுற்றி பார்க்கவே ஒரு வாரம் ஆகும். சிங்கப்பூரில் உள்ள நூல் நிலையமும் பாராட்டுக்குரியது. இந்த இரண்டு நூலகங்களையும் மனதில் வைத்து தான் கருணாநிதி இதை உருவாக்கினார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நூல்களும் சரியாக இல்லை. ஆட்சி மாறிய பின் சரி செய்யப்பட்டு வருகிறது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com