“இந்தியா வெல்லும்; அதை 2024 தேர்தல் சொல்லும்!” - திருச்சியில் முழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிட வாரிசுகளாகிய நாங்கள், வாரிசுகள் கட்சி தான்” என திருச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்

திருச்சியில் திமுக நாடாளுமன்ற தேர்தல் பயிற்சி பட்டறை கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் 12 மாவட்டங்களில் இருந்து வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதற்காக திருச்சிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று பொறுப்பாளர்கள் மத்தியில் உரையாற்றினார்.

DMK
MK Stalin
DMK MK Stalin

அப்போது பேசிய அவர், “தி.மு.க.வின் 15 மாவட்டங்களில் இருந்து, 12,642 ஓட்டுச் சாவடி பொறுப்பாளர்கள் வந்துள்ளனர். திராவிட இயக்கம் துவங்கி, 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையும் கொண்டாடி வருகிறோம். புதிதாக ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை முடிந்துள்ளது. இந்நிலையில், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி என்பதையே அடிப்படையாக மனதில் கொண்டு கடமையாற்றி வருகிறோம். கொரோனா முதல் அலையின் போது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. அதில், தி.மு.க. வினர் சிலரை இழந்தபோதிலும், முழுவீச்சில் நிவாரணப்பணி செய்யப்பட்டது.

ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் மீதுள்ள நம்பிக்கையில் தான், லோக்சபா தேர்தலில், ‘நாடும் நமது, நாற்பதும் நமது’ என்று முழங்கி இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, வெற்றி ஒன்றே உங்களின் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.

MK Stalin
MK Stalin

ஓட்டுச் சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும், ‘திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்’ என்ற புத்தகத்தை படித்து, அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மக்களுக்கு தேவையானவற்றை கண்டறிந்து, அதனை நிறைவேற்றிக் கொடுங்கள். கட்சியின் உயர்மட்ட மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் போன்றவர்கள் ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும்.

எந்தக் கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு, அனைவருக்கும் பொதுவான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் குறைகள் இருக்கலாம்; ஆனால், ஆட்சியில் எவனாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாது. மக்கள் நம் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

உங்களுடைய (திமுகவினர்) பரப்புரையால், அவதுாறுகள் எல்லாம் சுக்குநுாறாக நொறுங்கிப் போகும். பரப்புரை பாணி மாறி விட்ட காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொறுப்பாளர்கள் சமூக ஊடங்களில் கணக்கு துவங்கி, நல்ல முறையில் அதனை பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் அவதுாறுகளுக்கு பதில் சொல்லுங்கள். எதையாவது சொல்லி யாராவது திசை திருப்புவதற்கு பலியாகி விடக்கூடாது.

governor rn ravi
governor rn ravipt desk

தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாடு கவர்னர் நமக்காக பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லை. தேர்தல் வரை அவரே இருக்கட்டும். நமக்கு ஓட்டுக்கள் அதிகரிக்கும்.

யார் ஆட்சி வர வேண்டும் என்பதை விட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது, என்பது தான் முக்கியம். இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. கட்சி சிதைத்து விட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால், இந்தியா முழுமைக்கும் நம் அணி ஆட்சிக்கு வர வேண்டும். பா.ஜ.க. ஆட்சி நீடித்தால், ஜனநாயகம், சமூக நீதி, அரசியல் அமைப்பு சட்டம் போன்றவற்றை காப்பாற்ற முடியாது.

பழனிசாமி போன்ற ஊழல் பேர்வழிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு, பிரதமர் ஊழலை பற்றி பேசுகிறார்... பேசலாமா? ஊழல் காரணமாக, கர்நாடகா மக்கள் விரட்டியடித்த சம்பவம் மறந்து விட்டதா? ஆக இப்படியானவர்களை இந்த தேர்தலில் முழுமையாக வீழ்த்தியாக வேண்டும். தமிழகத்தில் 40 தொகுதி போனாலும், மற்ற வடமாநில எம்.பி.,க்களை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். பல்வேறு மொழி, பல்வேறு சிந்தனை கொண்டவர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ.க.

Narendra Modi
Narendra ModiTwitter

ஒற்றை கட்சி ஆட்சி அமைந்தால், ஒருவர் கையில் அதிகாரம் சென்று விடும். அதனால், இந்த தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும். அதற்காக, 26 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி தான் இந்தியாவை காப்பாற்றப் போகிறது. இதை, பிரதமர் மோடியால் தாங்கிக் கொள்ள முடியாமல், ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் சொல்வது போல், இது வாரிசுகளுக்கான கட்சிதான். ஆரியத்தை வீழ்த்த புறப்பட்ட திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள், என்பதை தைரியமாக, பெருமையுடன் சொல்லமுடியும்.

தமிழகத்தை, தமிழக மக்களை மட்டுமின்றி மற்ற மாநிலங்களையும், மணிப்பூர் போல் ஆகிவிடாமல் காப்பாற்ற வேண்டும்.

MKStalin
MKStalin

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் போர்ப்படை தளபதிகள் நீங்கள். உங்களில் ஒருவனான நான், உங்களை நம்பி, லோக்சபா தேர்தலை ஒப்படைத்திருக்கிறேன். இந்தியா வெல்லும்; அதை 2024 தேர்தல் சொல்லும்” என்று உரையாற்றினார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com