தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.. முதலமைச்சரிடம் ஸ்டாலின் வலியுறுத்தல்
சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் திமுக செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழகத்தில் வறட்சியின் காரணமாக தினமும் 5 விவிசாயிகள் உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. காவிரியில் இருந்து சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்காததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதாலும் விவசாயிகள் அதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கவும் முதலமைச்சரிடம் திமுக சார்பில் வலியுறுத்தியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
தைத் திருநாளாம் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் தர வலியுறுத்தியுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், திமுக ஆட்சியின் போது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வகுத்து தந்த விதிமுறைகளை பின்பற்ற திமுக ஆட்சியில் அவரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாகவும் அதனை தற்போதுள்ள அதிமுக அரசு பின்பற்ற தவறிவிட்டதாகவும் கூறினார்.