தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் மாற்றம்.. துரைமுருகனிடமிருந்து கனிமவளத் துறை பறிப்பு!
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை, இன்று மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறை மற்றும் கனிமம் மற்று சுரங்கத் துறை அமைச்சராக துரைமுருகனும், சட்டத்துறை அமைச்சராக எஸ்.ரகுபதியும் இருந்து வந்தனர். இந்நிலையில், அத்துறைகளில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத் துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுபோல, அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை, அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் துறைகள் மாற்றம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக, ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து. இனி, அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் கவனிப்பார் என்றும், அமைச்சர் ரகுபதி இனி கனிமவளத்துறையை கவனிப்பார் என்றும் கூறப்படுகிறது. எனினும், மூத்த அமைச்சரின் துறைகள் மாற்றப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. சமீபத்தில், அமைச்சர்களாக இருந்த செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை அண்மையில்தான் மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அமைச்சரவையில் இலாகா மாற்றப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது துரை முருகனின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.