“வள்ளுவர் சிலையை அவமதிப்பதா..! இரும்புக்கரத்தால் அடக்குங்கள்” : பாஜக
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சாணியை பூசிவிட்டு சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, திருநீறு பூச்சுடன் தமிழக பாஜக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படம் வெளியிட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனிடையே, திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழக பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், “குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு.. நின்றன்னார் மாய்வர் நிலத்து
யுகங்கள் கடந்து வாழும் வள்ளுவருக்கு தீங்கிழைத்து ஆதாயம் தேடுவோர், எப்பெரும் மனிதராய் இருந்தாலும் குடியோடு அழிவர்
#திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.