நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி மெரினாவில் பாஜகவினர் போராட்டம்
தமிழறிஞர் நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி, சென்னை மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழறிஞர் நெல்லை கண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன், நெல்லை கண்ணனை கைது செய்யக் கோரி பல இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தடையை மீறி போராட்டம் நடத்தியதாகக் கூறி, அவர்களை கைது செய்தனர்.
இதே போன்று, பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் சிட்டி சென்டர் அருகே பாஜகவினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் இடையே செய்தியாளர்களிடையே பேசிய ஹெச்.ராஜா, “இதுவரை நெல்லை கண்ணனை கைது செய்யாதது ஏன்?. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு அடுத்த போராட்டம் அறிவிக்கப்படும்” என்றார். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.