
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக, தங்களது வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு விடை சொல்லும் மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டிய பணிகளில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
அதேபோல் அதிமுக - திமுக கட்சிகளின் கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை , கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக, தங்களது வேட்பாளர்களை இன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை, 5 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை டெல்லியில் உள்ள பாஜக ஆட்சிமன்றக் குழுவிடம் இன்று அளிக்க இருக்கிறோம். அதன்படி இன்றோ அல்லது நாளையோ வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.