விரைவுச் செய்திகள்: சூடு பிடிக்கும் ஒட்டுக்கேட்பு விவகாரம் | பள்ளிகள் திறப்பு எப்போது?

விரைவுச் செய்திகள்: சூடு பிடிக்கும் ஒட்டுக்கேட்பு விவகாரம் | பள்ளிகள் திறப்பு எப்போது?
விரைவுச் செய்திகள்: சூடு பிடிக்கும் ஒட்டுக்கேட்பு விவகாரம் | பள்ளிகள் திறப்பு எப்போது?

எதிர்க்கட்சிகள் அமளி - பிரதமர் மோடி குற்றச்சாட்டு: பட்டியலினத்தோர் மத்திய அமைச்சரானதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டி இருக்கிறார்.

மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை: மத்திய அரசு யாரையும் உளவு பார்க்கவில்லை என மக்களவையில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்திருக்கிறார். பிரபலங்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறு என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

சூடு பிடிக்கும் ஒட்டுக்கேட்பு விவகாரம்: ராகுல் காந்தி, மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் பிரஷாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் அலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பிரகலாத் படேல், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவசா உள்ளிட்டோரின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டதாக ஐயம் எழுந்துள்ளது.

காவிரி-குண்டாறு இணைப்புக்கு கர்நாடகா எதிர்ப்பு: காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேகதாது திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனுதாக்கல் செய்திருக்கிறது.

பள்ளிகள் திறப்பு எப்போது? - முதல்வர் விளக்கம்: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து உடனடியாக முடிவு எடுக்க முடியாது எனவும், தொடர் ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்திருக்கிறார்.

+2 மாணவர்கள் 100% தேர்ச்சி: தமிழகத்தில் பிளஸ் டூ மதிப்பெண்கள் வெளியானது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு: மதிப்பெண்கள் போதவில்லை என கருதும் மாணவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும், 22ஆம் தேதி முதல் பிளஸ் டூ மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.

சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடு இல்லை - பிரதான்: சென்னை ஐஐடியில் சாதி, மத பாகுபாடுகள் இல்லை என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்திருக்கிறார். திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் பதிலளித்திருக்கிறார்.

குடியரசுத்தலைவருடன் முதல்வர் சந்திப்பு: குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவிற்கு தலைமை தாங்க அழைப்புவிடுத்ததாக பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு ரத்து: ஆர்.எ.பாரதி உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று கூறி, பட்டியல் இனத்தவரை அவமதித்ததாக ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு பற்றி விசாரணை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு குறித்து விசாரிக்கப்படும் என தமிழக அரசு கூறியிருக்கிறது. முழுமையாக விசாரித்து முறைகேட்டில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.

ஹெச்.ராஜா முன்ஜாமீன் மனு தள்ளுபடி: நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் ஹெச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

நடிகர் விஜய் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்: சொகுசு காருக்கான வரி விவகாரம் தொடர்பான நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com