விரைவுச் செய்திகள்: ஓட்டுநர் பயிற்சி - புதிய விதிமுறைகள் | பைடன் - புடின் சந்திப்பு

விரைவுச் செய்திகள்: ஓட்டுநர் பயிற்சி - புதிய விதிமுறைகள் | பைடன் - புடின் சந்திப்பு
விரைவுச் செய்திகள்: ஓட்டுநர் பயிற்சி - புதிய விதிமுறைகள் | பைடன் - புடின் சந்திப்பு

தமிழகத்திற்கு மேலும் 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவிலிருந்து வந்தன. 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கான ஊசிகளை விரைவாக மாவட்டங்களுக்கு பகிர்ந்து அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓட்டுநர் பயிற்சி போதும்; '8' போட வேண்டாம்: வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமம் பெற்று விடலாம். அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது.

பயிற்சியாளர் நாகராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி: தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பயிற்சியாளர் நாகராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக காவல்துறை தெரிவித்ததை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கோயில் ஆக்கிரமிப்புகள் - ஆய்வுக்கு உத்தரவு: ஒரு ஏக்கருக்கு அதிகமான பரப்பளவுள்ள கோயில்களில் ஆக்கிரமிப்பு குறித்து தமிழ்நாடு அரசு ஆய்வு செய்கிறது. நேரில் ஆய்வு செய்து ஜூன் 30க்குள் அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரியின் நீர்வழிப்பாதையில் முதல்வர் ஆய்வு: கல்லணையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ள சூழலில், தஞ்சையில் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.

வீடுகளுக்கு சென்று தடுப்பூசி - நீதிமன்றம் அறிவுரை: வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளா, காஷ்மீர் மாநில அரசுகள் வெற்றிகரமாக அமலாக்கியதை சுட்டிக்காட்டி மும்பை உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி?: தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து இன்று அறிவிப்பு வெளியாகிறது. இதில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தேனியிலும் ஓபிஎஸ் ஆதரவு பேனர்: நெல்லையில் போஸ்டரைத் தொடர்ந்து தேனியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவை வழிநடத்துவோம் என்ற வாசகத்தால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் திரிணமூல் கட்சியில் முகுல் ராய்: தாய்க் கட்சியான திரிணமூல் காங்கிரசுக்கு முகுல் ராய் மீண்டும் திரும்பினார். பாரதிய ஜனதாவில் சேர்ந்து அண்மையில் நடந்த தேர்தலில் எம்எல்ஏ ஆன நிலையில் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் வரி வருவாய் ரூ.2.74 லட்சம் கோடி: கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசுக்கு வரி வருவாய் 2.74 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அதில் அனைவருக்கும் தடுப்பூசி, 25 கோடி ஏழைகளுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கியிருக்கலாம் என பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

பைடன் - புடின் சந்திப்புக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: சுவிட்சர்லாந்தில் அமெரிக்க அதிபர் பைடனும் ரஷ்ய அதிபர் புடினும் அடுத்த வாரம் சந்திக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சந்திப்பு நடைபெறும் ஜெனிவாவில் ஆயிரம் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வானில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com