விரைவுச் செய்திகள்: மேகதாது அணை -கர்நாடகா பிடிவாதம் | மகளிர் ஹாக்கி - இந்திய அணி வெற்றி

விரைவுச் செய்திகள்: மேகதாது அணை -கர்நாடகா பிடிவாதம் | மகளிர் ஹாக்கி - இந்திய அணி வெற்றி
விரைவுச் செய்திகள்: மேகதாது அணை -கர்நாடகா பிடிவாதம் | மகளிர் ஹாக்கி - இந்திய அணி வெற்றி

மேகதாது அணை கட்டுவோம் - கர்நாடகா திட்டவட்டம்: மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என மாநில தலைவர் அண்ணாமலை புதிய தலைமுறையிடம் விளக்கமளித்திருக்கிறார்.

விரைவில் இலவச மின்சார இணைப்பு: இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்திருக்கிறார்.

பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கை: தமிழக பள்ளிகளில் பாடதிட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளி +2 தனித் தேர்வர்கள் தேர்ச்சி: தனித் தேர்வர்களாக பிளஸ் டூ தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், விரும்பினால் தேர்வு எழுதலாம் என்றும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

திறந்தநிலை பல்கலை. பட்டதாரிகள் - பதவி உயர்வு கிடையாது: திறந்தநிலை பல்கலைகழகம் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதவி உயர்வு பெறமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

திருத்தணி கோயிலில் பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை: திருத்தணி முருகன் கோயிலில் வரும் 4ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

பட்டாசு ஆலை விபத்து - ஒருவர் பலி: சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

பஞ்சாபில் பள்ளிகளை திறக்க உத்தரவு: பஞ்சாபில் வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் தளர்வுகளற்ற ஊரடங்கு: கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வாரயிறுதி நாட்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வுசெய்ய மத்திய குழு வருகை புரிந்துள்ளது.

அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி: ‌‌ஒலிம்பிக் பேட்மிண்டனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார் இந்தியாவின் பி.வி.சிந்து. அரையிறுதிப் போட்டியில் சீன தைப்பே வீராங்கனை தாய் சு யிங்-கிடம் தோல்வியடைந்தார்.

குத்துச்சண்டையில் பூஜா ராணி தோல்வி: ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வியடைந்தார். சீன வீராங்கனை லி கியானிடம் 0 - 5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று பதக்க வாய்ப்பை இழந்தார்.

மகளிர் ஹாக்கி - இந்திய அணி வெற்றி: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா. லீக் சுற்றின் கடைசி போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com