விரைவுச் செய்திகள்: ஊரடங்கு நீட்டிப்பு? | நாங்கள் தேடும்பொறிதான் - கூகுள்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொழில்துறையின் கீழ் இயங்கும் டிட்கோ மூலம் தொழில் தொடங்க முன்வருவோருக்கு உதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
+2 பொதுத்தேர்வு ரத்தா? - ஓரிரு நாளில் முடிவு: தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
குஜராத், ம.பி.யில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக குஜராத், மத்தியப்பிரதேச மாநில அரசுகள் அறிவித்துள்ளன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில அரசுகளும் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?: சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யுமா? என கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்ஜாமீன் கோரினார் முன்னாள் அமைச்சர்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் காவல்துறை தேடும் நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 பாஜக எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும்: புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்கள் அமர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நியமனம் செல்லும் என்று கூறி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப் பலன்: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 497 கோடி ரூபாய் ஓய்வூதிய பலன்களை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலைகளை 6 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கோயில்களில் தீ விபத்தை தடுக்கக்கோரி முறையீடு: தமிழகத்திலுள்ள பழமையான கோயில்களில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.
தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருவதாகவும் நம்பிக்கை அளித்துள்ளார்.
மதுரையில் முன்பதிவு மூலம் தடுப்பூசி: மதுரையில் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி போடும் முறை அமலானது. தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாங்கள் சமூகவலைதளம் அல்ல; தேடுபொறிதான்: நாங்கள் சமூக வலைதளம் இல்லை; வெறும் தேடுபொறிதான் என்பதால் புதிய விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூகுள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.