விரைவுச் செய்திகள்: ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பு | விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

விரைவுச் செய்திகள்: ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பு | விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்
விரைவுச் செய்திகள்: ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பு | விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

செப். முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பு: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் செப்டம்பர் முதல் தயாரிக்கவுள்ளது. ஆண்டுக்கு 30 கோடி தடுப்பூசி தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

நீட் குழு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதல்ல: நீட் தொடர்பாக தமிழக அரசு ஆய்வுக்குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதல்ல என்றூ, பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவிக்க இயலும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காணொளியில் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி மற்றும் தொற்று தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்கள் நலன் காக்கப்படும்: மேகதாது விவகாரத்தில் இரு மாநிலங்களின் நலன் காக்கும் வகையில் முடிவெடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தபின் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியிருக்கிறார்.

கர்நாடக அரசை கண்டித்து போராட்டம்: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டுக்கு 1 கோடி தடுப்பூசி - முதல்வர் கோரிக்கை: தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?: தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது குறித்து ஆய்வறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்: வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரிய நடிகர் விஜய்யின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு லட்சம் ரூபாய் அபராத தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்: சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் தண்டனை விதிக்கப்படுவதாக 2ஆவதாக தொடரப்பட்ட போக்சோ வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பெண் பாலியல் புகார் - காவல்துறை விளக்கம்: பழனியில் பெண் ஒருவர் தனக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டதாக கூறிய விவகாரத்தில் பெண்ணின் உடலில் காயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளதாக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: நீட் தேர்வுக்கு இன்று மாலை 5 மணி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், செப்டம்பர் 12ஆம் தேதி தேர்வு நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்: மதுரையில் கண்மாய் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 500க்கும் அதிகமான கட்டடங்களை இடிக்கும்பணி தொடங்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மருந்துக்கு வரி விலக்கு - முதல்வர் கோரிக்கை: முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

மழை -வெள்ளம் - நிலச்சரிவு: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர், உத்தராகண்ட், ஹிமாச்சலில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

104 நாடுகளில் பரவிய டெல்டா வகை கொரோனா: இந்தியாவில் உருவான டெல்டா வகை கொரோனா வைரஸ்104 நாடுகளுக்கு பரவி விட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. அதிகளவில் தொற்று பரவலையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கியூபாவில் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்: கியூபாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுக்கிறது. பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாகவும் கொரோனாவை சரியாக கையாளவில்லை என்றும் போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com