அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்

அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்

அதிமுக தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்
Published on

அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருக்கக்கூடிய தமிழ்மகன் உசேன் அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் முக்கிய பொறுப்பினை ஒருவருக்கு வழங்கும்போது அதற்கு, பொதுக்குழுவின் ஒப்புதல் அவசியம். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்பதால் தற்போது நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்தில் ’தற்காலிக’ அவைத்தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான தமிழ்மகன் உசேன், 1953ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோதே கட்சியில் பணியாற்றியவர். 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டபிறகு, அரசுப்பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய இவர், நேரடியாக எம்.ஜி.ஆரிடம் அதிமுகவில் வந்து இணைந்தார். அதன்பிறகு அதிமுகவில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தார். 

அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் காலமானதைத் தொடர்ந்து தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தற்போது அதிமுகவில் பல்வேறு குழப்பமான சூழல் நிகழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கியபிறகு, தமிழ்மகன் உசேனை தற்காலிக அவைத்தலைவராக நியமித்திருப்பது முக்கிய அரசியல்நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com