“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெண்களின் சார்பில் வரிக்குறைப்புக்கு முறையிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “மத்திய அரசின் பட்ஜெட் சுவையான பட்ஜெட். சுமையான பட்ஜெட் அல்ல. சில நேரங்களில் சில வரிகள் நாட்டிற்கு தேவையானதாக இருக்கும். பெட்ரோல், டீசல், தங்கத்தின் மீதான வரிகள் சுமையாக பார்க்கப்படலாம். பெட்ரோல் டீசல் விலையின் ஏற்றத்தால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் பேட்டரி கார்களை ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறோம். அதனால் சுற்றுச்சுழலுக்கும் பாதிப்பு வராது. இன்னொரு நாட்டின் மீது நாம் சார்ந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. பேட்டரிக்காருக்கான உதிரி பாகங்கள் கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கும் வரிவிலக்கு கொடுத்துள்ளார்கள். ஒரு மாற்றத்தை நோக்கி செல்ல வேண்டும் என்பதுதான் இதன் குறிக்கோள்.
தங்கம் விலை குறைய வேண்டும். தங்கம் தமிழகத்தை பொறுத்தவரை ஒரு பயன்பாட்டு முறை. மற்ற மாநிலங்களுக்கு ஒரு பயன்பாட்டு முறை. தமிழகத்தை பொறுத்தவரை தங்கம் சாமானியப்பெண்களின் வாழ்வில் இன்றியமையாதது. மற்ற மாநிலங்களில் தங்கம் பிஸ்கட்டாக பதுக்கப்படுகிறது. ஆடம்பர பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதனால் அதை செய்திருப்பார்கள். ஆனால் பெண்கள் சார்பில் தனிப்பட்ட கோரிக்கையாக வைக்கலாம் என இருக்கிறேன்.
ஒரு குடும்பத்திற்கு அடிப்படையாக என்ன தேவையோ அவையெல்லாம் கிடைத்துவிடுகிறது. நாம் அதை பார்க்கவில்லை. அடிப்படை தேவைகளை சரிசெய்துவிட்டாலே நாட்டு மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். சாமானிய, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் இது” எனத் தெரிவித்தார்.