“என் மகன் கோபப்பட்டதை அரசியலாக்குவது கீழ்த்தரமானது” - தமிழிசை காட்டம்
தனது குடும்பச்சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சென்னை விமானநிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “குடும்பச்சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது. எந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான். என் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும். இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், “நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். மரியாதைக்குரிய உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்திற்கு வருவதக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்றேன். அப்போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சி வரமறுத்ததால், என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா ? என்று நிலையில் கோபப்பட்டார். இதனை சிலர் அரசியலாக்குவது கீழ்த்தரமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.