சந்தக்கவிஞர் மீது சந்தேகம் அதிகரிக்கிறது - தமிழிசை
''சந்தக்கவிஞர் மீது சந்தேகமே அதிகரிக்கிறது'' என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
#MeToo என்ற பிரசாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து தமிழகத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்மயின் புகாருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ''பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்பட வேண்டியது. நிச்சயம் விசாரிக்கப்பட வேண்டியது. தனி மனித ஒழுங்கீனங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் உரிய விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும்'' என தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சின்மயி குற்றச்சாட்டுக்கு இன்று விளக்கம் கொடுத்த வைரமுத்து, ''குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.
வைரமுத்துவின் விளக்கத்திற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள தமிழிசை செளந்தரராஜன் ''சந்தி சிரித்தபின் சந்திக்கிறேன் என்கிறார் கவிஞர்... நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார்.