ஆட்டோ டிரைவரிடம் தமிழிசை நேரில் நலம் விசாரிப்பு
சென்னையில் பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் வீட்டிற்கு சென்று தமிழிசை சவுந்தரராஜன் நலம் விசாரித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பெட்ரோல் விலை ஏன் இப்படி உயர்கிறது என்று கேள்வி எழுப்பினார். “ஒரு நிமிஷம் அக்கா, பெட்ரோல் விலை ஏன் உயர்கிறது” என்று ஆட்டோ டிரைவர் கேட்க, செய்தியாளர்களை பார்த்துக் கொண்டிருந்த தமிழிசை சிரித்துக் கொண்டே பேட்டியை தொடர்ந்தார். ஆனால், தமிழிசைக்குப் பின்னால் இருந்த பாஜகவினர் உடனடியாக அந்த ஆட்டோ டிரைவரை பிடித்து வெளியே தள்ளினர். அந்த ஆட்டோ டிரைவரை தாக்கினர்.
இந்நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுநர் கதிரின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழிசை சவுந்தரராஜன் அவரிடம் நலம் விசாரித்தார். அதோடு ஆட்டோ டிரைவர் கதிருக்கு இனிப்புகளையும் வழங்கினார்.