”மே 4 வரை கனவு காணட்டும்; ஷூட்டிங்கிற்கு இடம் தேட விஜய் செல்வார்” - தமிழிசை விமர்சனம்!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்செந்தூரில் சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்ட விஜயின் ஆன்மீகப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. குழந்தைகளை வைத்து வாக்கு கேட்பது விதிமீறல் என தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் நல்ல நடிகர் என்றாலும், குழந்தைகளின் எதிர்காலத்தை அரசியலால் பாதிக்கக் கூடாது என அவர் எச்சரித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பரபரப்பாக நடந்துமுடிந்தது. எதிர்வரும் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் முடிவை நோக்கி காத்திருக்கின்றனர்.
முதன்முதலாக மக்கள் தேர்தலை சந்தித்திருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், தங்களுக்காக மக்களின் ஆதரவின் முடிவை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்துவருகின்றனர்.
இந்தசூழலில் தேர்தலுக்கான முடிவுற்கு முன்னதாக இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்த தவெக தலைவர் விஜய் சிறப்பு பூஜையான சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டு வேண்டுதல் செய்தார். விஜயின் இந்த நகர்வும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மே 4 வரை கனவு காணட்டும்..
இந்நிலையில் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், “விஜய் நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் குழந்தைகளை வைத்து பெற்றோர்களிடம் தனக்கு வாக்கு செலுத்த வேண்டும் எனச் சொல்வது தவறு. குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்ய கூடாது என்பது விதியாக உள்ளது. குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைக்க கூடாது. குழந்தைகள் படிக்க வேண்டும், எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும். கல்லூரியை தாண்டிய பின் வாக்களிப்பது சிந்திப்பது பரவாயில்லை. வாக்களிக்க ஒரு வயது இருக்கிறது. குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என்பதை விஜய் உணர வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக எந்த அடையாளமும் காண்பிக்க மாட்டேன், தேர்தலுக்குப் பின்பு சில அடையாளங்களை அவர் காண்பிக்கிறார். ஆன்மீக பயணத்தை குற்றம் சொல்ல மாட்டேன், ஆன்மீக தேடலுக்கு செல்லும் தவெக விஜய் ஷூட்டிங்கிற்கு இடம் தேட செல்வார்.
200 தாண்டி விசில் போகும் என செங்கோட்டையன் சொல்வது விசில் சத்தம் போல் இல்லை. பாம் சத்தம் போல் இருக்கிறது. விசிலுக்கு என்று ஒரு சத்தம் இருக்கிறது. அதை தாண்டி போக முடியாது. 200 தாண்டுவது என பிர்மாண்டமான கனவு. செங்கோட்டையன் கோட்டை கட்டுவது எப்படிப்பட்ட கனவு என்று எல்லாருக்கும் தெரியும். கனவு காண அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நல்ல கனவு காணட்டும். மே 4ந் தேதி வரை எண்ண எண்ண கனவு காண்பார்கள்” என பேசியுள்ளார்.

