திமுகவிற்கு கிடைத்திருப்பது தோல்விகரமான வெற்றி! – தமிழிசை சௌந்தரராஜன்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவை தேர்தலோடு சேர்த்து, பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது.
அதிமுக, தேமுதிக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்தநிலையில், திமுக, நாதகவிற்கு இடையே இருமுனை போட்டி நிலவிவருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில்ல் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்தநிலையில், மின்னனு வாக்கு எண்ணிக்கையிலும் திமுக முன்னிலை பெற்று வருகிறது.
சமீபத்திய நிலவரத்தின் படி, திமுகவின் சந்திரக்குமார் 43,488 வாக்குகளுடன் முன்னிலையிலும், நாதகவின் சீதாலட்சுமி 9152 வாக்குகளை பெற்று பின்னடைவிலும் நீடித்து வருகின்றனர்.
திமுகவிற்கு கிடைத்திருப்பது தோல்விகரமான வெற்றி..
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், திமுகவிற்கு கிடைத்திருப்பது தோல்விகரமான வெற்றிதான் என்றும், எதிர்ப்போட்டியாளர்கள் இல்லாத களத்தில் வென்றுவிட்டு பெருமைப்பட ஒன்றும் இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
புதியதலைமுறைக்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “திமுகவிற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கிடைத்திருப்பது, தோல்விகரமான வெற்றிதான். போட்டியில் கூட ஓடிவருவதற்கு ஆளே இல்லாத இடத்தில் Cup-ஐ நான்தான் வென்றேன் என்பதில் பெருமை கிடையாது.
மற்றவர்கள் போட்டியிடுவதற்கு தேவையான நம்பிக்கையை நீங்கள் செய்துதரவில்லை. நீங்கள் களங்கப்பட்டு நின்றதால், நாங்கள் களத்தில் இல்லை” என்று பேசியுள்ளார்.