“தமிழிசை எனக்கு எதிரியல்ல”- ஆட்டோ ஓட்டுநர் விளக்கம்
சென்னை சைதாப்பேட்டையில் பாரதிய ஜனதா தொண்டர்களால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடந்த 16ஆம் தேதி சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழிசையிடம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ ஓட்டுநர் கதிர் என்பவர் கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது, பாஜகவினர் சிலர் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலைத்தளங்களில் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பலர் கருத்திட்டு வந்தனர்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கதிர் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழிசை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனிப்பு வழங்கி ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய தமிழிசை, ஆட்டோ ஓட்டுநரை தொண்டர்கள் தாக்கவில்லை என விளக்கமளித்தார். கூட்டத்தில் தேவையற்ற சலசலப்பு ஏற்படாமல் இருக்க அவரை தொண்டர்கள் அப்புறப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
தமிழிசையின் வருகை குறித்து ஆட்டோ ஓட்டுநர் கதிர், வீடு தேடி வந்த பாஜக தமிழகத் தலைவர் தமிழிசையை வரவேற்றேன், சைதாப்பேட்டையில் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துக் கொண்டோம் என்று கூறினார். மேலும் தமிழிசை தனக்கு எதிரியல்ல என்று அவர் தெரிவித்தார்.