’விஜய் முதல்வராவதற்கு ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்..’ - தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக அரசியல் குழப்பத்தில், தவெக பெரும்பான்மை எண்கள் இல்லாமல் ஆட்சியமைக்க முயல்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டுகிறார். ஆளுநர் எண்ணிக்கையுடன் வருமாறு கூறியும், விஜய் மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஸ்டாலின் வெளியில் ஆதரவு பேசிக்கொண்டு உள்ளே தடைகள் செய்கிறார் என்றும், விசிக தலைவர் திருமாவளவன் சுயலாப பேரம் பேசுகிறார் என்றும் அவர் விமர்சிக்கிறார்.
தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்காக கடந்த 4 நாட்களாக தமிழக வெற்றிக்கழகம் போராடி வருகிறது. 108 இடங்களை கைப்பற்றிய அக்கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைக்காமல் குழப்பிவரும் சூழலில், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு பெற்று தற்போது 116 இடங்களை வசப்படுத்தியுள்ளது தவெக.
ஆனாலும் பெரும்பான்மைக்கு தேவையான கூடுதல் 2 இடங்களை வைத்திருக்கும் திருமாவளவன் தலைமையிலான விசிக இதோ ஆதரவை தருகிறோம் என 2 நாட்களாக இழுத்தடித்து வருகிறது. முதலில் இடதுசாரிகள் முடிவை விசிக ஆதரிக்கும் என தெரிவித்திருந்த திருமாவளவன், இன்னும் எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்துவருகிறார்.
இந்தசூழலில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் நிறைவேற்றப்படும் சூழல் இருப்பதால் குழப்பம் நீடித்துவருகிறது.
இந்நிலையில் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என கூறிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுவதாகவும், இடதுசாரிகள் முடிவே தங்களின் முடிவு என சொல்லிவிட்டு திருமாவளவன் பேரம் பேசுவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், “மெஜாரிட்டி எண்கள் இல்லாததால் தான் தவெக தலைவர் விஜயை 3 முறை ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார். ஆளுநர் மாளிகை தெளிவாக சொல்லிவிட்டது நீங்கள் எண்ணிக்கையோடு வாருங்கள் நாங்கள் அனுமதி தருகிறோம் என்று, ஆனால் ஒவ்வொருமுறையும் எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு ஆளுநரை மீது பழிபோடுவது நியாயமில்லை.
இவ்வளவு எண்ணிக்கை இருந்தால் தான் தேர்வாக முடியும் என்ற நிலையில், அந்த எண்ணிக்கை இல்லாமலேயே என்னை தேர்வு செய்யுங்கள் என்பது தவறு. அது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது.
முக ஸ்டாலின் தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, பின்னால் இருந்து பல முட்டுக்கட்டைகளை போட்டுக்கொண்டிருக்கிறார். எல்லோரும் வெளியில் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு வெளியில் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கும் சூழல் தான் இருக்கிறது.
இரண்டு கம்னியூஸ்ட்டுகளும் நானும் ஒட்டுமொத்தமாக தான் முடிவெடுப்போம் என்று கூறிய திருமாவளவன், இன்று ஏன் தயங்குகிறார், என்ன பேரம் பேசிக்கொண்டிருக்கிறார். இப்படி இவர்கள் எல்லோரும் தங்களுடைய சுயலாபத்திற்காக முடிவுகளை எடுத்துவிட்டு பாஜகவை பழிசொல்வதில் எந்தவிதத்திலும் நியாயமில்லை” என பேசியுள்ளார்.

