மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருட்டு
சென்னையில் மத்திய அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசையின் செல்போன் திருட்டு போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செல்போன் திருட்டு சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரியும் ஜெயகிருஷ்ணன் என்பவர் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது வீட்டில் புகுந்த திருடர்கள் அவரின் செல்போனை திருடிச் சென்றுள்ளனர்.
இதேபோல், வடபழனியை சேர்ந்த முகமது தல்கா என்பவரின் வீட்டிலும் இருந்த 3 செல்போன்களையும் திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை கண்டு பிடித்தனர். இதுபோல் பல இடங்களில் செல்போன் திருட்டு போகிறது. மேலும் செல்போன் வழிப்பறியும் நடக்கிறது.
இந்நிலையில், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செல்போனை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தமிழிசையும் கலந்து கொண்டார். அப்போது மர்ம நபர்கள் தமிழிசை சவுந்திரராஜனிடம் இருந்த அவரது செல்போனை திருடி சென்றுள்ளனர். இது அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

