கராத்தே போட்டியில் சாதித்த தமிழக மாணவர்கள் - வெளிநாடு செல்ல நிதியில்லா நிலை..!

கராத்தே போட்டியில் சாதித்த தமிழக மாணவர்கள் - வெளிநாடு செல்ல நிதியில்லா நிலை..!
கராத்தே போட்டியில் சாதித்த தமிழக மாணவர்கள் - வெளிநாடு செல்ல நிதியில்லா நிலை..!

சேலம் மற்றும் அசாமில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கல்லுடைக்கும் தொழிலாளியின் மகள் தங்க பதக்கம் வென்றுள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் பகுதியை சேந்தவர் கராத்தே பயிற்சியாளர் அர்ஜுன். இவர் தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புற பள்ளி குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் சுமார் 50 மாணவர்கள் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாமில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், அர்ஜூனிடம் பயிற்சி பெற்ற 14 பேர் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டனர். 

இந்த போட்டியில் தாரமங்கலம் அருகேயுள்ள பெரியசோரகை பகுதியை சேர்ந்த முத்து கண்ணம்மாள் தம்பதியின் மகள் சுமித்ரா பங்கேற்றார். இவர் அசாமில் நடந்த கராத்தே சண்டை பிரிவு போட்டியில் இரண்டாவது சுற்றிலேயே எதிராளியை நாக்கவுட் செய்து தங்கப்பதக்கம் வென்றார். இதேபோன்று அந்த போட்டியில் கலந்துகொண்ட கவுரி வெள்ளிப்பதக்கமும் கரிஷ்மா, கோகுல், திருக்குமரன் ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். 

இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் சஞ்சய், ராகுல், தர்னிஷ், வைஷ்ணவி, பார்த்திபன் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். அதிக எடைப்பிரிவில் முருகன் இரண்டாமிடம் பிடித்தார். மேலும், கவுசிக், தீபக், மகேந்திரன் ஆகியோர் மூன்றாமிடமும், கவின்குமார், சந்தோஷ், ராவின் ஆகியோர் நான்கமிடமும் பிடித்து வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் கலந்துகொண்ட 14 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர். 

இதில், கல்லுடைக்கும் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த மாணவி சுமித்ரா சிறப்பாக நாக்கவுட் செய்து வெற்றி பெற்றதன் மூலம் தமிழக கராத்தே அணியில் இடம்பெற்றுள்ளார். எடப்பாடியில் நடந்த போட்டியில் வென்ற ஆட்டோ ஓட்டுனரின் மகன் சஞ்சையும் தமிழக அணியில் இடம் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் அடுத்தாண்டு ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஜெர்மனி போட்டிக்கு செல்வதற்கான வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். 

இதனால் தமிழக அரசு ஜெர்மனியில் நடைபெறும் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள, இவர்கள் இருவருக்கும் உதவிகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கருணை உள்ளம் கொண்டவர்கள் இவர்கள் கராத்தே போட்டியில் கலந்து கொள்வதற்கான உதவிகளை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயிற்சியாளர் அர்ஜுன் கூறும்போது, கிராமப்புற மாணவர்களிடம் ஏராளமான திறமைகள் ஒழிந்துள்ளதாக கூறினார். அந்த திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com