முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் காலமானார்
முதுபெரும் தமிழறிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான கி.த.பச்சையப்பன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 85. புதுச்சேரியில் பிறந்த இவர், தனது பதின் வயதிலேயே பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கி.த.பச்சையப்பன், சென்னை ஆசிரியர் சங்கத் தலைவர், தமிழக தமிழாசிரியர் கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக பச்சையப்பன் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சுமார் 70 ஆண்டு காலம் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புலவர் கி.த.பச்சையப்பனார் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிவில் வழக்கிற்காக ஆஜராக வந்த பச்சையப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நீதிமன்ற வளாகத்தில் உயிரிழந்தார்.
தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தன்னலம் இன்றி பொதுவாழ்வுக்கு தன்னை ஒப்படைத்துக் கொண்டு பாடுபட்ட பச்சையப்பனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புலவர் கி.த.பச்சையப்பன் மறைவு பேரிழப்பு எனக் கூறியுள்ள வைகோ, அவரது உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பகுத்தறிவு மற்றும் தன்மான உணர்வை காலமெல்லாம் தமிழர்க்கு ஊட்டிய கி.த.பச்சையப்பன் உயிரிழந்தது தமிழ்க்குடிக்கே பேரிழப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.