தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்றும், பிரதமர் தமிழை புகழ்ந்தபோது அதைக்கொண்டாடவில்லை என்றும் மூத்த பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இன்று இந்தி தினத்தன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும்” என கூறியிருந்தார்.
இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாடத் தெரியாதவன் தமிழன். சமஸ்கிருதத்தை விட, பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.