தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்! - கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்! - கோயில்களில் சிறப்பு வழிபாடு
தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்! - கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது

தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை முதல் நாளான இன்று “பிலவ” ஆண்டு விடைபெற்று “சுபகிருது” புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டை மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகாலை முதலே கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இயற்கை சார்ந்து விழா கொண்டாடும் மக்கள் சித்திரைத்திருநாள், தமிழ் வருடத்தின் புதிய தொடக்கமாகக் கருதி கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. தை மாதத் தொடக்கமும், ஆவணி மாதத் தொடக்கமும் கொண்டாடப்பட்டதாக ஒவ்வொரு காலகட்டத்திலும் மேற்கோள்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆயினும் பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகான காலகட்டத்தில் சித்திரை மாதம் முதல்நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகவும், பிற்காலங்களில் சித்திரை மாதப்பிறப்பு தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சித்திரை மாதத்தில் திருவிழாக்கள், கோயில் தேரோட்டங்கள் என மக்கள் ஓன்று கூடி களிப்பது பண்பாட்டு பதிவாக நீள்கிறது. இந்நாளில் வீடுகளை அலங்கரித்து, கோயில்களுக்குச் சென்றும், குடும்பமாக வழிபட்டும் எளிமையான விழாவாகவே சித்திரைத்திருநாள் அமைகிறது. இத்திருநாளில், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு உள்ளிட்ட அறுசுவை உணவுகளை படைத்தும், கனிகளை வைத்தும் மக்கள் வீடுகளில் வழிபடுகிறார்கள்.

இந்நாள் கேரளாவில் விஷூவாக கொண்டாடப்படுகிறது. கனி காணுதல் நிகழ்வில், பழங்கள், நகைகளை வைத்து பூக்கோலமிட்டு, கண்ணாடி வைத்து முகம்பார்த்து அந்நாளை தொடங்குவதும், வழிபடுவதும் மலையாள மொழி பேசும் மக்களின் முறையாக இருக்கிறது. சித்திரையையொட்டி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சூரிய நாட்காட்டியை பின்பற்றும் பஞ்சாபிலும் வைசாக்கி என்ற பெயரில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதேபோல, இலங்கையில் தமிழர்கள், சித்திரை பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாக விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். இதற்கு முந்தைய நாள் சிங்களர்களின் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. மலேசியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் சூரிய நாட்காட்டியை பின்பற்றி இதேசமயத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. உறவுகளை ஒன்றிணைக்கும் பண்பாட்டு நிகழ்வான விழாக்கள், அன்பைப் பரிமாறவும், இயற்கையின் கரங்களை பற்றிக்கொள்ளவுமாக விரிகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com