இடைக்கால பட்ஜெட் | தமிழக அரசின் கடன் ரூ.10.62 லட்சம் கோடி.. தங்கம் தென்னரசு சொல்வது என்ன?
தமிழ்நாடு அரசின் 2026 - 2027ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே, இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில்தான் இன்று, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது தமிழ்நாட்டில் நிதிநிலை குறித்துப் பேசியிருக்கும் அவர், தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் 2026 - 2027ஆம் ஆண்டு நிதியாண்டில் ரூ.10.62 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் நிதிநிலைக் குறித்து சட்டமன்றத்தில் தங்கம் தென்னரசு பேசுகையில், ”முன்னெப்போதும் இல்லாத அளவிலான சவால்களை தற்போதைய அரசு எதிர்கொண்டு வருகிறது. மாநிலங்களுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் வரியை சீரமைப்பது என ஒவ்வொரு வழியிலும் செயற்கையான நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசுகளின் செலவினங்களின் செலவு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் திட்டங்களுக்கு வழங்க வேண்டிய நிதியையும் தராமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செலவினத்தை 50-50 விகிதத்தில் மேற்கொள்ள ஒப்புதல் அளித்திருந்தாலும் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் தற்போது வரை கிடைக்கவில்லை. இதனால், மத்திய அரசின் நிதியையும் மாநில அரசே செலவழித்து வருகிறது. இதன்காரணமாக, தமிழக அரசுக்கு மேலும், சுமை அதிகரிக்கிறது. பலமுறை நினைவூட்டப்பட்ட போதிலும் தமிழக அரசின் மனுக்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.
ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3,478 கோடி ரூபாய், மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக் குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய 2,226 கோடி ரூபாய் ஆகியவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிதிகளில் உள்ளடங்கும். இதனால், மாநிலத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயர்ந்து காணப்படுவது மட்டுமல்லாமல் மாநிலத்திற்கு உரிய கடன் திறட்டும் திறனையும் பாதித்துள்ளது. மாநில அரசின் பணப்புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாநில அரசு எதிர் கொண்டுவரும் இத்தகைய சவால்களால், மத்திய அரசு மாநில அரசின் நிதி நிலையில் ஏற்படுத்தியுள்ள அழுத்தமானது மாநிலத்தின் நிதிநிலையில் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில், 2025 - 2026 நிதியாண்டின் செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 9,42,851 கோடியாக இருந்த நிலையில், இந்த வருடம் 1.21 லட்சம் கோடியாக நிதி பற்றாக்குறை ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 2026 -2027 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 10.62 லட்சம் கோடியாக உயரும் என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

