நெஞ்சு வலியால் அவதிப்பட்ட பெண் ! பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்ட நடத்துனர்?
பேருந்தில் நெஞ்சு வலி காரணமாக மயங்கிய பெண்ணுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடந்துநர் இணைந்து நிர்கதியாக அப்பெண்ணை பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் பாகாயத்தில் இருந்து காட்பாடி செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் செய்யாறை சேர்ந்த பூஷணம் என்ற பெண் பயணம் செய்துள்ளார். பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது, தனக்கு நெஞ்சு வலிப்பதாக அப்பெண் சக பயணிகளிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் பேருந்திலேயே பூஷணம் மயங்கியும் விழுந்துள்ளர். இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இணைந்து அப்பெண்ணை சித்தூர் பேருந்து நிலையத்தில் நிர்கதியாக இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து அப்பேருந்து நிலையத்திலேயே அப்பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பூஷணத்தின் மகன் மஞ்சுநாதன் கூறும்போது, “ என் அம்மா போனில் இருந்து ஒரு கடைக்காரர் என்னிடம் பேசினார். என் அம்மா மயங்கி நிலையில் இருந்தபோது பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்து நிலையத்திலேயே அவரை இறக்கிவிட்டு சென்றதாக கூறினார். இதுகுறித்து போலீசாருக்கு கூட அவர்கள் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லையாம். அந்த கடைக்காரர் தான் 108-ஐ அழைத்துள்ளார். வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதபோது என் அம்மா உயிரிழந்ததுவிட்டதாக மருத்துவர்கள கூறினர். நான் அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை. அதே சமயம் குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாதது வேதனையளிக்கிறது” என்றார். இதனிடையே வேலூர் எஸ்.பி இதுகுறித்து கூறும்போது, “ பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத பைக் மோதியதால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. எனவே தேவையான விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.