அந்தமானுக்கு நகரும் காற்றழுத்த தாழ்வால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது: வானிலை மையம்
தெற்கு அந்தமான் பகுதியை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தெற்கு தாய்லாந்து ஒட்டிய கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று மாலை தெற்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகரக்கூடும் என தெரிவித்தார். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 2 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக வலுப்பெற்று டிசம்பர் 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கும் என கூறியுள்ளார். இதனால், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும், அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் எனவும் தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறினார்.