“பொங்கல் வரை குளிர் அதிகமாக இருக்கும்” - தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தில் வரும் 14-ம் தேதிவரை குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பொதுவாக தமிழகத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் குளிர் காலமாக இருக்கும். கார்த்திகை மாதம் தொடங்கி தை வரை குளிர் இருக்கும். பின்பு, படிபடியாக குளிர் குறைந்து வெயில் அடிக்க தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு குளிர் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது கோவை, ஈரோடு, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட உள்மாவட்டங்களில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், உயர்அழுத்தமும், ஈரப்பதமும் இல்லாததுமே இதற்கு காரணம் என்றும் கூறினார்.
கடலோர மாவட்டங்களில் குளிர் சற்று குறைவாக இருக்கும் எனக் கூறிய பிரதீப்ஜான், சென்னையை பொறுத்தவரை, அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளில் குளிர் அதிகமாகவும், திருவல்லிக்கேணி உள்ளிட்ட கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சற்று குறைவாகவும் இருக்கும் என்றார். வட அந்தமானில் வலுவிழந்த நிலையில் காணப்படும் பபுக் புயல், தமிழகத்திற்கு ஒருதுளி மழையைக் கூட தராது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்தார்.