“இது வரைவு வாக்காளர் பட்டியல் அல்ல. மனதுக்கு நிறைவான வாக்காளர் பட்டியல்” - தமிழிசை சௌந்தரராஜன்.!
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளை கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்த நிலையில், இன்று வாக்காளர் வரைவுப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 97.35 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. உண்மையாகவே தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏமாற்றியவர்கள் ஏமாறப்போகும் தேர்தலாக இருக்கப்போகிறது. எஸ் ஐ ஆர் என்பது வெளிப்படையான நடவடிக்கை. இந்நடவடிக்கையை எதிர்த்ததே தவறு” என்றார்.
பின் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், “இது வரைவு வாக்காளர் பட்டியல் அல்ல. மனதுக்கு நிறைவான வாக்காளர் பட்டியல். போலி வாக்காளர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்தபின் எஸ் ஐ ஆரை வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். தேர்தல் முடிந்த பின் எஸ் ஐ ஆரை நடத்தியிருந்தால் நீக்கப்பட்டவர்கள் எல்லாம் வாக்களித்து போலி ஜனநாயகத்தை உருவாக்கியிருப்பார்களா இல்லையா? போலியான வெற்றியை உருவாக்கியிருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

