22 ஆண்டுகளுக்குப் பிறகு தடம் பதித்த தமிழ்நாடு ஹாக்கி அணி - இந்திய அணியில் இடம் கிடைக்குமா?

22 ஆண்டுகளுக்குப் பிறகு தடம் பதித்த தமிழ்நாடு ஹாக்கி அணி - இந்திய அணியில் இடம் கிடைக்குமா?
22 ஆண்டுகளுக்குப் பிறகு தடம் பதித்த தமிழ்நாடு ஹாக்கி அணி - இந்திய அணியில் இடம் கிடைக்குமா?

22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய ஹாக்கி அரங்கில் தடம்பதித்த தமிழ்நாடு அணி. மீண்டும் இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பிடிக்க முதல் படிக்கட்டாக இந்த வெற்றி அமையுமா?.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 12வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. 27 மாநிலங்கள் பங்கேற்று கலந்துகொண்ட இந்த போட்டியில், தமிழ்நாடு அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் ஹரியானா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1- 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. டை பிரேக்கர் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி ஹரியானா அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 22 ஆண்டுகளாக இறுதி போட்டிக்கு முன்னேற முடியாத தமிழக அணிக்கு வெள்ளிப்பதக்கம் மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது.

பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய அணி வீரர்களுக்கு எக்மோர் ரயில்வே நிலையத்தில் மேல தாளம் முழங்க ஹாக்கி யூனிட் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பூங்கொத்து கொடுத்து ஹாக்கி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் எப்படி கொடிகட்டி பறந்ததோ அதே போன்றுதான் இந்திய ஹாக்கி அணியில் தமிழ்நாடு வீரர்கள் கொடிகட்டி பறந்தனர், ஹாக்கியில் உலககோப்பை,ஒலிம்பிக்,ஆசிய கோப்பை என எந்த தொடர் நடைப்பெற்றாலும் அதில் தமிழ்நாடு வீரர்கள் நிச்சயமாக இடம்பெற்று இருந்தனர் ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்துக்கொண்டே இருந்து வந்த நிலையில் மீண்டும் தற்போது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணிக்கு தமிழக வீரர்கள் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அணியின் பயிற்சியாளர் சார்லஸ் டிக்சன் தெரிவித்துள்ளார்.

அதேபோல உலக ஹாக்கி அரங்கிலும் இந்திய ஹாக்கி அரங்கிலும் தமிழக ஹாக்கி வீரர்கள் தடம்பதிக்க வேண்டும் என்றால் தமிழகத்தில் தற்போது இருக்க கூடிய Turf மைதானங்களை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் மைதானங்கள் இல்லாமல் வீரர்கள் காத்திருக்கும் நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளாக தேசிய அளவில் ஹாக்கி போட்டியில் பங்கேற்க சென்றாலும் முதல் முறையாக தற்போதுதான் அணிக்கு என தனியாக பிசியோ தெரபிஸ்ட் மற்றும் கூடுதல் பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்றும் அணியில் விளையாடிய 18 வீரர்களில் 12 வீரர்களுக்கு தற்போது வரை அரசு சார்பாக வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பதாகவும் எனவே அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக ஹாக்கி வீரர் அக்‌ஷய் தெரிவித்துள்ளார்.

41 ஆண்டுகளுக்கு பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பதக்கம் வென்று இருந்தாலும் அந்த அணியில் தமிழகத்தை சார்ந்த ஒருவர் கூட இல்லாமல் இருந்தது மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருந்தது, அடுத்து வரும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக குறைந்தபட்சம் 3 வீரர்களாவது ஹாக்கியில் தமிழக வீரர்கள் தேர்வு பெற வேண்டும் என்றால் வீரர்களுக்கான நவீன பயிற்சி வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஹாக்கி வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- சந்தான குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com