தீபாவளிக்கு ஞாயிறு மட்டும்தான் விடுமுறையா? - மாணவர்கள் அதிர்ச்சி
மூன்று நாள் கூட விடுமுறை இல்லையென்றால் தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்று பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்தாண்டுவரை ஆண்டு முழுவதும் பள்ளி பணிநாட்களின் அட்டவணையை பள்ளிகளுக்கு அனுப்பி வந்தது. மழை, வெயில் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிடப்படாத விடுமுறைகள் அளிக்கப்படுவதால், பணி நாட்களை அதற்கேற்றார் போன்று அட்டவணைப்படுத்த ஒவ்வொரு மாதமும் பணி நாட்கள் அட்டவணை இந்தாண்டு முதல் அனுப்பப்படுகிறது. அப்படி அக்டோபர் மாதத்திற்கு அனுப்பப்பட்ட அட்டவணையில், திபாவளிப் பண்டிகை நாளான அக்டோபர் 27ஆம் தேதிக்கு முந்தைய நாள் பணி நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை பார்த்த பிறகுதான், பண்டிகையை மூன்று நாட்கள் கொண்டாட நினைத்த அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது.
ஆயுத பூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் தொடர் விடுமுறை விடவேண்டிய சூழல் இருப்பதால், பணி நாட்களை சரிசெய்ய இப்படி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களை உறவினர்களோடும், குடும்பங்களோடும் செலவிட நினைப்பதில் தவறில்லைதான். அதே சமயம், அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், பணி நாட்களைக் குறைத்தால் சிக்கலாகும் என்ற விஷயத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. விடுமுறை குறித்த அரசின் முடிவிற்கு காத்திருப்பதைத் தவிற வேறு வழியில்லை.