தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் நீர் இருப்பு.. 90 அணைகளின் மோசமான நிலை!!
தமிழ்நாட்டில் 90 அணைகளில் ஒட்டுமொத்த நீர் இருப்பு 36 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது குறித்த பெருஞ்செய்தியைப் பார்க்கலாம்.
வடகிழக்குப் பருவமழைப் பொய்ப்பு மற்றும் கர்நாடகா காவிரி நீரைத் திறந்துவிட மறுத்ததால், தமிழ்நாட்டின் 90 அணைகளில் 36.28 சதவீத நீர் மட்டுமே உள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும். கடந்த ஆண்டு இதே நாளில் அணைகளில் 185.70 டி. எம்.சி. நீர் இருந்த நிலையில், தற்போது மொத்தக் கொள்ளளவான 224.34 டி.எம்.சி.யில் 81.39 டி.எம்.சி. நீர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதில் 39 அணைகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நீர் உள்ளது. ஆழியாறு, சோலையாறு, பெருஞ்சாணி ஆகிய அணைகளில் 1 டி.எம்.சி.க்கும் குறைவாகவே நீர் இருப்பதாகவும், வெறும் 3 அணைகள் மட்டுமே முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் நீர்வளத்துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு 152.08 டி.எம்.சி. காவிரி நீர் கிடைத்திருக்க வேண்டிய நிலையில், 58.34 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்தும் கர்நாடகா நீர் திறக்கத் தொடர்ந்து மறுத்து வருவதால், 93.74 டி.எம்.சி. பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரிப் படுகைப் பாசனத்தின் ஆதாரமான மேட்டூர் அணையில் 25.84 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. காவிரிப் படுகை மாவட்டங்களின் கடைமடைக் கால்வாய்கள் வறண்டுள்ளதால் சம்பா சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகளில் 763 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன.
நெல்லையில் 236, சிவகங்கையில் 139 ஏரிகள் உட்பட 1,461 ஏரிகள் நீரின்றி முற்றிலும் வறண்டுள்ளன. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் 5.27 டி.எம்.சி. நீர் மட்டுமே கையிருப்பில் உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்துள்ளதால், வரும் கோடையில் பாசனம் மற்றும் குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனச் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

