கொரோனா பாதிப்புடன் விமான நிலையத்தை தாண்டியது எப்படி? - கேள்வி எழுப்பும் மக்கள்!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சூழலில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
ஓமனிலிருந்து காஞ்சிபுரம் திரும்பியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் ஓமனில் இருந்து வந்த நிலையில் அவரை எப்படி விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்கள் என்றும், உரிய சோதனை நடத்தப்பட்டிருந்தால் அவர் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டிருக்க வேண்டுமே என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட நபர் கடந்த மாதம் 27-ம் தேதி சென்னை வந்துள்ளார். கடந்த 6ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதற்கு பிறகே அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அப்படியானால், இடைப்பட்ட 6 நாட்களில் அவர் சென்று வந்த இடங்கள், வீட்டில் உள்ளவர்கள், உறவினர், நண்பர்கள் இவர்களின் நிலைமை என்ன? அவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. விமான நிலையத்தில் முறையான சோதனை நடந்தால், அறிகுறிகளுடன் இவர் சொந்த ஊருக்கு வந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, “கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் நேரடி தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 19 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவருடன் விமானத்தில் பயணித்த 27 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுமி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.