ஆக்சிஜன், ஐசியுவில் 40,000+ நோயாளிகள்: தமிழகத்துக்கும் டெல்லி நிலைமை ஏற்படும் அபாயம்!

ஆக்சிஜன், ஐசியுவில் 40,000+ நோயாளிகள்: தமிழகத்துக்கும் டெல்லி நிலைமை ஏற்படும் அபாயம்!
ஆக்சிஜன், ஐசியுவில் 40,000+ நோயாளிகள்: தமிழகத்துக்கும் டெல்லி நிலைமை ஏற்படும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒன்றரை லட்சம் பேரில் சுமார் 40 ஆயிரம் பேர் ஆக்சிஜன் படுக்கைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் நிலையை தமிழகம் எட்டும் நிலை வெகு தொலைவில் இல்லை. தற்போதைய நிலையில் தமிழகத்தில் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.

மே 10ம் தேதி நிலவரப்படி ஒரு லட்சத்து 52 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் புள்ளி விவரப்படி சுமார் 40 ஆயிரம் பேர் ஆக்சிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர். குறிப்பாக தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் 5 மாவட்டங்களில் உள்ள கணக்கீடுகளை பார்த்தால் டெல்லியின் நிலையை தமிழகம் விரைவில் எட்டிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. சென்னையில் மே 10 ஆம்தேதி மட்டும் 7 ஆயிரத்து 149 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களோடு சேர்த்து மொத்தம் 35 ஆயிரத்து 143 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 6 ஆயிரத்து 248 பேர் தற்போது தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஆயிரத்து 181 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அரசு கொடுத்துள்ள தரவுகளின்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் மற்றும் கிங் என எந்த அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் காலியாக இல்லை. அதேபோல், தனியார் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையிலும் இதேநிலைதான் நீடிக்கிறது.

கோவையில் மே 10ஆம் தேதி நிலவரப்படி, தொற்று பாதிக்கப்பட்டுள்ள 13 ஆயிரத்து 406 பேரில், 2 ஆயிரத்து 794 பேர் ஆக்சிஜன் படுக்கைகளிலும், 550 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கோவை அரசு மருத்துவமனைகளில் 13 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே காலியாக இருக்கின்றன. அதேபோல செங்கல்பட்டில் சிகிச்சைப்பெற்றுவரும் 12 ஆயிரத்து 978 பேரில், ஆயிரத்து 689 பேர் ஆக்சிஜன் படுக்கைகளிலும் 573 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் இருக்கின்றனர்.

மதுரையில் ஆயிரத்து 793 பேர் ஆக்சிஜன் படுக்கையிலும், 707 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதற்கு அடுத்தபடியாக தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் 778 பேர் ஆக்சிஜன் படுக்கைகளிலும், 212 பேர் ஐசியுவிலும் உள்ளனர். தமிழகத்திலேயே 576 பேர் மிககுறைவாக பாதிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தில் 266 பேர் ஆக்சிஜன் படுக்கைகளிலும், 46 பேர் ஐசியுவிலும் இருக்கின்றார்கள். எனவே, மக்கள் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகமும் டெல்லியை போல் மாறும் என்பதில் ஐயமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com