வரைவு வாக்காளர் பட்டியல்
வரைவு வாக்காளர் பட்டியல் web

தமிழ்நாட்டில் SIR | வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.. மாவட்ட வாரியாக நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் ஒரு மாதத்திற்கு மேலாக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்த தீவிர வாக்களர் பட்டியல் சிறப்புத் திருத்ததின் முடிவில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR க்கு முன் 10 லட்சத்து 75 ஆயிரத்து 577 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 9 லட்சத்தி 46 ஆயிரத்து 97 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் திருவாரூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில் திருவாரூர் மாவட்டத்தில் SIR க்கு முன் 5,22,982 ஆண் வாக்காளர்கள்,  5,52,526 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 10,75,577 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது SIRக்கு பின் 4,65,933 ஆண் வாக்காளர்கள், 4,80,111 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 9,46,097 வாக்காளர்கள் உள்ளனர். 

திருவாரூர் மாவட்டத்தில் 1,29,480 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 46,942 நபர்கள் இறந்தவர்கள், 24,845 நபர்கள் கண்டறிய முடியாதவர்கள்,  51,935 இடம் பெயர்ந்தவர்கள், 5,350 இரட்டை பதிவு பெற்றவர்கள், 408 இதர  இனங்கள் என மொத்தம் 1,29,480 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 86 ஆயிரத்து 973 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 37,937 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2,49,036 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். 

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 43 ஆயிரத்து 519 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 25,733 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2,17,786 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 60 ஆயிரத்து 397 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 36,922 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2 லட்சத்து 23 ஆயிரத்து 475 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 

நன்னிலம் சட்டமன்றம் தொகுதியில் ஏற்கனவே 2 லட்சத்து 84 ஆயிரத்து 688 வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 28,888 வாக்காளர்கள் நீக்கப்பட்டு 2 லட்சத்து 55 ஆயிரத்து 800 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியது என்ன?

தமிழிசை சௌந்தரராஜன்

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. உண்மையாகவே தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏமாற்றியவர்கள் ஏமாறப்போகும் தேர்தலாக இருக்கப்போகிறது. எஸ் ஐ ஆர் என்பது வெளிப்படையான நடவடிக்கை. இந்நடவடிக்கையை எதிர்த்ததே தவறு” என்றார்.

 பின் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், “இது வரைவு வாக்காளர் பட்டியல் அல்ல. மனதுக்கு நிறைவான வாக்காளர் பட்டியல். போலி வாக்காளர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்தபின் எஸ் ஐ ஆரை வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னவர்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். தேர்தல் முடிந்த பின் எஸ் ஐ ஆரை நடத்தியிருந்தால் நீக்கப்பட்டவர்கள் எல்லாம் வாக்களித்து போலி ஜனநாயகத்தை உருவாக்கியிருப்பார்களா இல்லையா? போலியான வெற்றியை உருவாக்கியிருப்பார்கள்” எனத் தெரிவித்தார்.

விராலிமலை  சட்டமன்ற தொகுதியில் நிலவரம் என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சரான விஜயபாஸ்கரின் விராலிமலை  சட்டமன்ற தொகுதியில் 17 ஆயிரத்து 104 வாக்காளர்கள் நீக்கம்.

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கரின் தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 958 வாக்காளர்கள் ஏற்கனவே பட்டியலில் இருந்த நிலையில் தற்போது 2 லட்சத்து 14 ஆயிரத்து 854 வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் 17 ஆயிரத்து 104 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் 8088 பேரும், கண்டறிய இயலாதவர்கள் என 908 பேரும், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் 6067 பேரும் இரட்டை வாக்கு உள்ளவர்கள் 2034 பேரும்  உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பதிவு, "சிவகங்கை மாவட்டத்தில் 1,50,828 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக அறிகிறேன்

காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று சரி பார்க்க வேண்டியுள்ளேன்

இத போன்று எல்லா அரசியல் கட்சிகளும் செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்

தேர்தல் ஆணையத்தை விட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எஸ் ஐ ஆருக்கு முன் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் SIR  சீரமைப்புக்கு பின் 6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவெற்றியூர் என 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் எஸ் ஐ.ஆர் படிவம் கொடுப்பதற்கு முன்பு 35,82,226 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு 6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 29,62,449 ஆகும். அதாவது 10 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 17.3  சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மதுரவாயில் சட்டமன்ற தொகுதியில் 4,42,775 வாக்காளர்கள் இருந்த நிலையில் எஸ்.ஐ. ஆர்க்குப் பின் 1,17,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்

மாதவரம் சட்டமன்ற தொகுதியில் 4,95,826 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் 1,09,499 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்,

 அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3,74,353 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் 69,842 வாக்காளர்கள் நீக்கப்பட்டும்,

அமைச்சர் நாசர் தொகுதியான ஆவடி சட்டமன்ற தொகுதியில் எஸ்ஐஆர்-க்கு முன்பு 4,70,737 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் 68,044 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆவடி தொகுதியில் 4,02,693 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்தபட்சமாக பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் 2,71,854 வாக்காளர்கள் இருந்து வந்த நிலையில் எஸ் ஐ ஆர் படிவம் மூலமாக 32,713 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

திருத்தணி சட்ட மன்ற தொகுதியில் 2,82,731 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆருக்கு பின், 30,577 வாக்காளர்கள்  நீக்கப்பட்டு 2,52,154 வாக்காளர்கள் உள்ளனர்.

10 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் இறந்த வாக்காளர்கள் 1,35,220 பேரும், முகவரி மாற்றம் செய்தவர்கள் 4,64,120 வாக்காளர்களும் இரட்டை பதிவெண்  கொண்ட வாக்காளர்கள் 20,437 பேரும் என மாவட்டத்தில் 6,19,777 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

 எஸ் ஐ ஆர் திருத்தம் முன்பு 10 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 3699 வாக்குச்சாவடிகள் இருந்து வந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் பிறகு 4005 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 17,61,262  இருந்து வந்த நிலையில் அது எஸ் ஐ ஆர் பிறகு 14,53,543 குறைந்துள்ளது. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 18,20,157 இருந்து வந்த நிலையில் 15,08,306 குறைந்துள்ளது. மூன்றாம் பாலினத்தனர் எண்ணிக்கை 807 ஆக இருந்து வந்த நிலையில் 600 ஆக குறைந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடப்பட்டவர்கள் படிவம் 6-ஐ பெற்று நாளை முதல்ஜனவரி 18 தேதி வரை அளிக்கலாம் என  ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்,

தென்காசி நிலவரம் என்ன?

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 902 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்-பட்டியலை வெளியிட்டு கலெக்டர் கமல் கிஷோர் தகவல்

தென்காசி மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை சர்வ கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான கமல் கிஷோர் இன்று வெளியிட்டார்.

தென்காசி  மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டது. 

அதன்படி தற்போது தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 25 ஆயிரத்து 797 வாக்காளர்கள் உள்ளனர். 

6,01,787 ஆண் வாக்காளர்களும், 6,23,852 பெண் வாக்காளர்களும், 158 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 902  வாக்காளர்கள் இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள் என அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 11 சதவீதம்  பேர்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை : வரைவு வாக்காளர் பட்டியலில் மூன்றில் ஒருவர் பெயர் நீக்கம்

திருச்சி நிலவரம்

எஸ் ஐ ஆர் மூலம் திருச்சி மாவட்டத்தில் 3,31,787 பேர் நீக்கப்பட்டுள்ளனர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன் வெளியிட்டார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

27.10.2025 தேதியின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 23,68,967

ஆண்கள் 11,46,454

பெண்கள் 12,22,125

19.12.2025 தேதியின்படி, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2037180

ஆண்கள் - 9,90,215 நீக்கப்பட்டவர்கள் - 1,56,239

பெண்கள் - 10,46,664 நீக்கப்பட்டவர்கள் -17,5461

கண்டறிய இயலாதவர்கள் - 44,276

இடம்பெயர்ந்தோர் - ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 831,

இறப்பு - ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 756,

இரட்டைப்பதிவு 985,

மொத்த வாக்காளர்களில் 14.01% நீக்கம்

கோவை நிலவரம்

கோவை மாவட்டத்தில் SIR க்கு பின்பு இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 பேர் (650590) நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 20 சதவீதம் வரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 1,23,971 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் தொகுதியில் 76,391 வாக்காளர்கள் நீககம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

தமிழ்நாட்டில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தேர்தல் ஆணையத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தொடர்ந்து, இன்று மாவட்ட வாரியாக வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 90 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

குறைந்த மற்றும் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட தொகுதிகள்.!

முன்னாள் தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தொகுதியில் தான்

குறைந்த அளவிலான வாக்காளர்கள் நீக்கம்

தேனி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி 1,25,739 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் படி தேனி மாவட்டத்தில், 10,04,564 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில், 4,88,962 ஆண் வாக்காளர்கள், 5,15,440 பெண் வாக்காளர்கள், 162 இதரர் அடங்குவர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக, ஆண்டிபட்டியில் 30,148, பெரியகுளத்தில் 33,989, போடிநாயக்கனூரில் 24,386, கம்பத்தில் 37,216 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் முன்னாள் தமிழகம் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் தொகுதியான போடிநாயக்கனூரில் தான் 24,386 என்ற குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவின் கம்பம் ராமகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் 37,216 என்ற அதிகளவிலான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர் நிலவரம்.!

தமிழ்நாட்டில் அதிகம் வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் sir முன் 7,02,450 வாக்காளர்கள் இருந்தனர். அதில், 218444 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட வரைவு வாக்களார் பட்டியல் வெளியீடு

சென்னை மாவட்டத்தில் இருக்கும் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் IAS வெளியிட்டிருக்கிறார்.

சென்னையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40,04,694 வாக்களர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு, சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கை 25,79,676 குறைந்திருக்கிறது.

அதன்படி, சென்னையில் மட்டும் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கும் மாவட்டங்களின் விவரம்.!

அரியலூர்

அரியலூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் 5,06,522. அதில் 24 ஆயிரத்து 368 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 15,லட்சத்து 44 ஆயிரத்து 625 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்வாக்காளர் 7 லட்சத்து 64 ஆயிரத்து 377 வாக்காளர்கள்

பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 80 ஆயிரத்து42 வாக்காளர்கள் உள்ளனர்.

1,82,865 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.84% வாக்காளர் நீக்கம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 20,98,561 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

எஸ்ஆர்ஐ திருத்த பணிக்கு பிறகு 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,

காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

மொத்த வாக்காளர்கள்

14,01,198

எஸ் ஐ ஆர் பணிகளுக்கு பிறகு உள்ள வாக்காளர்கள்

11,26,924

நீக்கப்பட்ட வாக்காளர்கள்

2,74,274

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்த மொத்த வாக்காளர்கள்:-3,17,295

எஸ் ஐ ஆர் பணிகளுக்கு பிறகு உள்ள வாக்காளர்கள்

2,67,313

நீக்கப்பட்ட வாக்காளர்கள்.

49,982

வாக்காளர் திருத்த வரைவு பட்டியல்.!

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்web

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் எனப்படும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்று வந்தது. டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டு டிசம்பர் 14 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் 100 சதவீத எஸ்.ஐ.ஆர் படிவங்கள் திரும்பப்பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று எஸ்.ஐ.ஆர்க்கு பிறகு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனித்தனியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வரைவு வாக்களர் பட்டியலில் இதில், இறந்தவரகள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் போன்றவை நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம்.!

தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல்எக்ஸ் தளம்

இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், 2வது கட்டமாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி மற்றும் சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. அந்த வகையில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்காளத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டது. இதில், 58 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிலில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com