கள்ளச்சாராயம் விற்றவருக்கும் நிவாரணம் வழங்கியது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த விளக்கம்

”இளைய சமுதாயத்தினர் கள்ளச் சாராயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறையினருக்கு தகவல் தருவது நல்லது” என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
M.subramaniam
M.subramaniampt desk

கள்ளச்சாராயம் விஷயத்தில் நிவாரணம் வழங்குவது மனிதாபிமான செயல். கள்ளச்சாராயம் விற்றவரும் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு நிவாரணம் வழங்கியதில் தவறில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள பேட்டியில், “எத்தனால், மெத்தனால் பயன்படுத்துவர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கும் பணி மாவட்ட ஆட்சியர் மூலம் நடைபெற்று வருகிறது. யார், யார் எத்தனால், மெத்தனால் வாங்கி உள்ளார்கள் அவர்கள் எதற்காக அதனை பயன்படுத்தி உள்ளார்கள் என்ற விவரத்தை மாவட்ட ஆட்சியர்கள் பெற்று வருகிறார்கள். யாராவது முறைகேடாக அதை பயன்படுத்தியது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த ஊரில் உள்ள மற்றவர்களுக்கு இது குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும். ஆனால், யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இளைய சமுதாயத்தினர் கள்ளச் சாராயம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் துறையினருக்கு தகவல் தருவது நல்லது.

hospital
hospitalpt desk

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய போது அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்தாரா? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்று இருக்கு. பாதிக்கப்பட்ட இடத்திற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி சென்றாரா? கள்ளச் சாராயம் விஷயத்தில் தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது நியாயமற்றது.

கும்பகோணம் மகாமக குளத்தில் ஜெயலலிதா புனித நீராடலின் போது பலர் உயிரிழந்தனர். அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு பிரச்னைகள் வந்தபோது எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் மருத்துவ பணியிடங்கள் குறித்த கேள்விக்கு, “கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ துறையில் 8 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இன்னும் பத்து நாட்களில் 1200 மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளானர். அதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் 10 நாட்களில் வெளியாக உள்ளது.

hospital
hospitalpt desk

பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்னும் பத்து நாட்களில் வெளியாக உள்ளது. முடிவு வெளியானவுடன் 900 பணியிடம் நிரப்பப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 8 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா காலகட்டத்தில் செவிலியர்களாக பணியாற்றிய 2 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் கும்பகோணம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாக சுகாதார மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என்றும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com