திருவள்ளுவரை இழிவுபடுத்தும் பாஜகவினருக்கு கண்டனம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
திருவள்ளுவருக்கு காவி உடையும், திருநீர் பூச்சும் அணிவித்து பாஜக இழிவு செய்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் அதிகாரப்பூர்வ தமிழ்நாடு ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டிருந்த பதிவில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல இருந்தது. இதுதொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவருக்கு, காவி உடையும், திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள்.
திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரை கொண்டாடிய பலரும், அவரை ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றது கிடையாது. பாஜகவிற்கு சொந்த பெருமிதங்களும், வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில், பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.