ஆளுநர் உரையுடன் நாளை துவங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்!

ஆளுநர் உரையுடன் நாளை துவங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்!
ஆளுநர் உரையுடன் நாளை துவங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்க உள்ளது.

ஆண்டுதோறும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நாளை கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். அதில் மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதியத் திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார். சுமார் ஒரு மணிநேரம் ஆளுநர் உரை நிகழும்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் உரையுடன் நாளைய சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவுப் பெறும். அதன்பிறகு சபாநாயகர் தலைமையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் சேர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்தை நடத்தி, இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள் நடைபெறும் என முடிவு செய்வார்கள்.

நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவை ஒட்டி அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராததால், இந்தக் கூட்டத் தொடரை எடப்பாடி தரப்பினர் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சர் என்ற அந்தஸ்துடன் முதல்முறையாக அவர் சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளார்.

பரந்தூர் விமான நிலையம், மின்சாரக் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வு, கோவை கார் வெடிவிபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com