தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9, 10 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தொழிலதிபர் ரத்தன் டாடா, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
அதன் பின்னர் கேள்வி - நேரம் தொடங்குகிறது. எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிக்க உள்ளனர். இதையடுத்து 2024 - 25ஆம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.