”ஆன்லைன் ரம்மி விளம்பரம்.. நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்” - தமிழக சட்ட அமைச்சர்!

”ஆன்லைன் ரம்மி விளம்பரம்.. நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்” - தமிழக சட்ட அமைச்சர்!
”ஆன்லைன் ரம்மி விளம்பரம்.. நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்” - தமிழக சட்ட அமைச்சர்!

ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது என்றும், இதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேலி செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதி மொழியை அமைச்சர் ரகுபதி வாசிக்க மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், “தமிழகத்தில் போதைப் பொருட்களை விற்பவர்கள் மீதும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு அதன்பின்பு இதனை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும்.

இதற்கு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டுமா என்று நேற்று ஒருவர் (முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி) கேலி செய்து உள்ளார். நாங்களாக மக்களிடம் கருத்து கேட்கவில்லை. நீதிமன்றம் சொன்னதன் அடிப்படையில் தான் கருத்து கேட்டுள்ளோம். அவர் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாக உள்ளது. கடந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கருத்து கேட்டு முறையாக இந்தச் சட்டத்தை கொண்டு வந்திருந்தால் ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்கலாம். நாங்கள் நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி ஒழிக்க நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிச்சயம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி ஒழிக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

மேலும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சில நடிகர்கள் நடிப்பது குறித்து அமைச்சர் ரகுபதியிடம் கேட்டபோது, “இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகர்களாகவேப் பார்த்து திருந்த வேண்டும்” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com