”ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது” - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

”ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது” - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி
”ஜெயலலிதா மரணத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது” - அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரை தொடர்பான கோப்புகள், சுகாதாரத்துறை செயலாளருக்கு அனுப்பப்படும் என்றும், கோப்புகளின் அடிப்படையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் அரசுக்கு பரிந்துரைப்பார் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 3 நாளாக சட்டமன்றத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் உட்பட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுகள் நடந்துள்ளன. இந்தியா முழுமையும் உள்ள இந்தி பேசா மாநில மக்கள் மகிழ்ச்சி அடையும் தீர்மானம் அது.

அ.தி.மு.க.வினரால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையும், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையும் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இரு அறிக்கையிலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது புகார்கள் கூறப்பட்டு இருப்பதால், அதை சந்திக்க இயலாமல் சட்டமன்றத்தில் நேற்று அவர்கள் கலவரத்தை அரங்கேற்றினர்.

பேரவைத் தலைவர் செயல்பாடு குறித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியதற்கு, பேரவைத் தலைவர் அதற்கான பதிலை நேற்றே கூறிவிட்டார். பன்னீர் செல்வம் தனது இருக்கைக்கு அருகில் அமருவதை சகித்துக் கொள்ள, தாங்கிக் கொள்ள முடியாமல் பழனிசாமி இன்று புகார் பட்டியல் வாசித்துள்ளார்.

பேரவைத் தலைவர் கடந்த ஒன்றரை ஆண்டில் நேர்மையாக, அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் உணர்வையும் மதிப்பவராக செயல்பட்டு வருகிறார். எதிர்கட்சியினருக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வருந்தும் அளவுக்கு, அவர்களுக்கு மதிப்பு தரப்படுகிறது.

ஸ்டாலின் முதல்வரானதால் கேள்வி நேரம் உட்பட அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. பழனிசாமி இன்று பேரவைத் தலைவரை குறை கூறியது அதிசயமாக உள்ளது. 13 பேர் சுடப்பட்டது தனக்கு தெரியாது, தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துக் கொண்டதாக கூறினார். அருணா ஜெகதீசன் அறிக்கையில் ஒவ்வொரு நிமிடமும் அனைத்து சம்பவமும் காவல்துறை, ஆட்சி நிர்வாகத்தினர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முதல்வருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்டம் ஒழுங்கு கவனிக்கப்படாமல் இருந்தது, தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே சமாளித்திருக்கலாம் என்று ஆணையம் கூறியுள்ளது. முதல்வர் அலட்சியம், அசட்டையாக இருந்ததற்கு இந்த சம்பவம் உன்னத உதாரணமாக இருந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

புகையிலை தயாரிப்பு, விளம்பரத் தடை, வணிகம் உற்பத்தி தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல இடங்களில் ஹுக்கா பயன்பாடு நாகரீகமான செயலாக மாறியுள்ளது. ஹுக்காவுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 ஆண்டு சிறை 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பேரவை நடக்கும்போது சென்னை மாநகரில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று பழனிசாமிக்கு தெரியும்.

எடப்பாடி அரசில் கொடநாடு தொடர் கொலை, சாத்தான்குளம் கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு என பட்டியல் இட முடியும். தனக்கு இருக்கும் நெருக்கடியையும், உட்கட்சி பிரச்சனையையும் மூடி மறைக்க ஆளுங்கட்சி மீது பழி சுமத்துகிறார். ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு கோப்புகள் அனுப்பப்படும். சுகாதாரத்துறை செயலாளர் சட்ட நிபுணரிடம் ஆலோசித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியானவுடன் தலைமைச் செயலாளர், ஆணையத்தின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர்களுக்கு அதுகுறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பேரவையில் இன்று தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரை குறித்து யார் மூலம் விசாரணை நடத்த வேண்டும், எப்படியான விசாரணை நடத்த வேண்டும் என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்துபேசி முடிவெடுப்பதாக முதல்வர் இன்று பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குழு அமைக்க வேண்டுமா என இனிதான் முடிவு செய்யப்படும். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் உட்பட அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

13 பேரின் சாவுக்கும் காரணமாக எடப்பாடி பழனிசாமியும் சேர்க்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் கூறியுள்ளனர். ஆறுமுகசாமி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமிழைத்த நபர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீத தமிழர்களின் மனதிலும் ஆணையத்தின் அறிக்கை போய் சேர்ந்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com