கட்சராயன் ஏரி விவகாரத்தில் ஸ்டாலினுடன் கவுரவப் பிரச்னை இல்லை: தமிழக அரசு
கட்சராயன் ஏரி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கவுரவப் பிரச்னை எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஸ்டாலின் மிகப்பெரிய கூட்டத்தோடு வந்ததால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசின் நிர்வாகத்தில் ஸ்டாலின் தலையிட்டு ஆதாயம் தேட முயற்சிப்பதாகவும், அரசுத் திட்டங்களின் பலன்கள் தனக்கு கிடைக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைப்பதாகவும் சேலம் மாவட்ட ஆட்சியரின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுடன் எத்தனைப் பேர் வந்தால் அனுமதிப்பீர்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசிடம் கேட்டு விளக்கம் அளிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.