“புதிய கல்விக் கொள்கை இதைத்தான் வலியுறுத்துகிறது” - ஆளுநர் ஆர்.என்.ரவி!

“உயர்கல்வியில் மாணவர்கள் ஒரு பாடத்தை மட்டும் படிக்காமல் பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; இதையே புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
r.n.ravi
r.n.raviPT Web

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் யுக்திகள் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு இன்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இந்தியாவில் 1960, 1980, 2020 ஆகிய ஆண்டுகளில் மூன்று கல்விக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இதனையே இந்தியாவிற்கான முதல் கல்விக் கொள்கையாகப் பார்க்கிறேன். 1960 மற்றும் 1980 கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை அனைவருக்கும் கல்வியைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதிலும் ஆங்கிலேயர்கள் வகுத்த பாடங்களை மட்டுமே நாம் கற்பித்து வந்தோம்.

R.N.Ravi
R.N.RaviPT Web

புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமான ஒன்று. இது, ஆட்சியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் இல்லாமல் கல்வியாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கருத்துகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கொள்கை.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் அதிக ஏழைகள், படிக்காத, வீடுகள் இல்லாத ஒரு நாடாக இந்தியா இருந்தது. அதற்குக் காரணம் முந்தைய அமைப்பில் பல அடிப்படைப் பிரச்னைகள் இருந்தன. மக்கள் - அரசு இடையே வாடிக்கையாளர் நிறுவனம் போன்ற ஓர் உறவு இருந்தது. மக்கள் அனைத்திற்கும் அரசை நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இந்தியா வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால், இதனை மாற்ற வேண்டும். அதில் முதலாவதாக மாணவர்களுக்கு இன்றையச் சூழலுக்கு ஏற்ப கல்வி கிடைக்க வேண்டும். உலக அளவில் மிகப் பெரிய தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு உள்ளது. அதனைத் துரத்தி நம்மால் பிடிக்க முடியாது. அதனால் நாம் மிக வேகமாக முன்னேற வேண்டும். அதற்கு மாணவர்கள் தங்கள் உயர்படிப்பில் பன்முக தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் பல லட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். ஆனால் வேலை கிடைப்பதில்லை. காரணம், பட்டங்களை வைத்து தற்போது யாரும் வேலை வழங்கவில்லை. தனித்திறனைப் பார்க்கின்றனர். தமிழ்நாடு போன்ற வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட இரண்டு மடங்கு GRE இருந்தாலும் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை விரிவாக்கம் செய்யாமல் உள்ளனர்.

’அதற்குக் காரணம் என்ன’ என நான் கேட்டால், ’மாணவர்களிடம் தனித் திறன் இல்லை’ எனக் கூறுகின்றனர். ஒரு சிலர், ’80-90% பொறியியல் மாணவர்கள் நிறுவனங்களில் பணியில் அமர்த்த முடியாத அளவில் உள்ளனர்’ எனக் கூறுகின்றனர்.

70% மாணவர்கள் கலை மற்றும் மனிதவளம் சார்ந்த படிப்புகளைப் படிப்பதாக UGC மூலம் அறிக்கை கிடைத்துள்ளது. இவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் என்ன வேலைக்குச் செல்வார்கள்? வரலாறு படிக்கும் மாணவர்கள் வெறும் வரலாறு மட்டும் படிக்காமல் பன்முகதன்மையோடு பல துறைகளை அவர்கள் படிக்க வேண்டும். அதனை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் மக்கள் தங்கள் சொந்த மொழிகளில் படித்தே பல அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் நாமும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதனை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அதற்கு, இளைஞர்கள் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையே காரணம். தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற பாதையில் செல்கிறது. இந்தியா வல்லரசு நாடாக உயர மாணவர்கள் உழைக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com