ஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால்
தான் சைவ உணவு உண்பதால், ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் மகாவீர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய ஆளுநர், “நான் சைவ உணவு உண்பதால், ராஜ்பவனில் அசைவம் இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டேன். ஆன்மீகத்திற்கு இந்தியாதான் முன்னோடி. நான் புகையிலையை பயன்படுத்துவது மனைவிக்கு பிடிக்காததால் அந்த பழக்கத்தை விட்டுவிட்டேன்” என்றார்.
தமிழகத்தின் 25வது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் பன்வாரிலால் புரோஹித். இவர் மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழகம் முழுவதும் ஆய்வுகள் நடத்துவது உள்ளிட்ட அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் வருகைக்கு பின்னர், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்குள் அசைவ உணவிற்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது. ஆளுநர் மாளிகைக்குட்பட்ட பகுதிகளில் முட்டை உட்பட அசைவ உணவுகள் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது என்று உத்தரவிடப்பட்டது. அசைவ உணவுகளை விரும்புபவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வெளியில் சென்று சாப்பிடவும் அறிவுறுத்தப்பட்டது.