“சட்டம் ஒழுங்கு என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம். உளவுத்துறையின் அறிக்கைகளை புறக்கணித்துவிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி விட முடியாது” என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளது.
ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழ்நாடு அரசு!
கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நீதிமன்றத்தை நாடிய நிலையில், 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள் அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு, உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
“ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது” - சென்னை உயர்நீதிமன்றம்
இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, “பொது இடங்களில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது.
உளவுத்துறை தகவல்கள் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை, அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பிற்கு தேவையான பாதுகாப்பை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
மேலும் “ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்ததோடு, ஒழுக்கத்தை கடைபிடித்து அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும். பிறரை தூண்டும் வகையில் பேரணி நடத்தக்கூடாது” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உத்தரவிட்டதோடு, அமைதியான முறையில் அணிவகுப்பு பேரணி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கும் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு!
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “ஒரு நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு விதிப்பது, தடை விதிப்பது உள்ளிட்டவை எல்லாம் அரசு உடைய உரிமை சார்ந்த விஷயம். சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை தகவல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடிப்படையில் தான் அரசால் முடிவு எடுக்கப்படும்.
ஆனால் இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் சென்னை உயர் நீதிமன்றமானது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அவர்கள் விருப்பப்பட கூடிய இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனை ஏற்க முடியாது. பேரணியை அனுமதிப்பது என்பது மிகவும் சென்சிட்டிவான விஷயம். இதில் முடிவெடுக்கக் கூடிய முழு அதிகாரமும் அரசுக்கு உள்ளது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
“சட்டம் ஒழுங்கு என்பது முக்கியம்! ஆர் எஸ் எஸ் கேட்கும் இடங்களிலெல்லாம் அனுமதி கொடுக்க முடியாது!”- தமிழ்நாடு அரசு வாதம்
மேலும், “பேரணியை முழுமையாக தடை விதிக்கவில்லை, மாறாக நிலைமையை கவனத்தில் கொண்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏராளமான பிரச்னைகள் உள்ள இடங்களில் பேரணி என்பது மறுக்கப்பட்டது. இவை அனைத்தும் உரிய முறையில் தான் செய்யப்பட்டது. இது ஏதோ ஒரு அமைப்பு சார்ந்த பிரச்சினை கிடையாது. ஒட்டு மொத்த மாநிலம் சார்ந்த விவகாரம்.
உளவுத்துறையின் அத்தனை அறிக்கைகளும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பாக கொடுத்திருந்தோம். ஆனால் அதனை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் முக்கியம். உளவுத் துறையின் அறிக்கைகளை புறக்கணித்துவிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி விட முடியாது” என திட்டவட்டமாக கூறினார்.
கோவை வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட பலவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி வாதம் முன்வைத்த போது, குறுக்கிட்ட ஆர் எஸ் எஸ் தரப்பு வழக்கறிஞர், “தமிழ்நாடு அரசு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ஆளும் கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரிய போது, அதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு, தங்கள் தரப்பு பேரணியை மட்டும் தடுத்து நிறுத்த பார்க்கிறது” என குற்றச்சாட்டை முன்வைத்தது.
“சட்டம் ஒழுங்கெல்லாம் எதுவும் இல்லை.. அவர்களுக்கு நாங்கள் பேரணி நடத்தக்கூடாது அவ்வளவுதான்!”- ஆர் எஸ் எஸ் வாதம்
மேலும் ஆர் எஸ் எஸ் தரப்பில், “சட்டம்-ஒழுங்கு பிரச்னை என்று தமிழ்நாடு அரசு சொல்வதெல்லாம் ஒன்றும் கிடையாது. உண்மை என்னவென்றால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. எனவே அந்த அமைப்பினால் எங்களது பேரணியில் அச்சுறுத்தல் ஏற்படலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் தமிழ்நாடு அரசு செய்யவேண்டியது எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தானே தவிர, எங்களது பேரணியை நிறுத்துவது கிடையாது” என்று வாதம் முன்வைத்தது.
தொடர்ந்து “தமிழ்நாட்டின் 50 மாவட்டங்களில் எங்களது பேரணியை அரசு தடுத்து நிறுத்தியுள்ளது” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு வழக்கறிஞர் கூறினார். இதன்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், “என்னது தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் இருக்கிறதா? நான் கேள்விப்பட்டதே இல்லை” என சிரித்தப்படியே பதில் கூறினார்.
10 நாட்களுக்குள் பேரணி நடத்துவதற்கான கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்து முழு அறிக்கை தாக்கல்!
இந்நிலையில் தமிழ்நாடு அரசு “இந்த வழக்கை 10 நாட்களுக்கு பின் விசாரிக்க வேண்டும். ஏனெனில் இந்த இடைப்பட்ட காலத்தில், பேரணி நடத்துவது தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்கிறோம். அதன்படி நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும். பேரணியை எங்கெங்கெல்லாம் அனுமதிக்க முடியும் என கட்டுப்பாடுகள் எல்லாம் விதிக்க வேண்டியிருக்கிறது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தது. கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.