ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதங்கள் என்னென்ன?
தமிழக சட்டப் பேரவையில் கடந்தாண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசும் பதில் மனுத் தாக்கல் செய்தது. இந்தப் பதில் மனுவில் சட்டம் இயற்றப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஏற்கெனவே ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று தமிழக அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழக அரசின் வாதத்தில், “ஆன்லைனில் விளையாடுபவர்கள் வழக்கு தொடரவில்லை. ஆன்லைன் விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளன. கிளப்-களுக்கு வெளியே ரம்மி விளையாடுவதற்கு தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிளப்களில் ரம்மி உள்ளிட்டவை மாலை நேரத்தில் மட்டுமே விளையாடப்படுகிறது.
ஆனால், ஆன்லைனில் 24 மணி நேரமும் விளையாடுவதால் சிறுவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதை கருத்தில்கொண்டு இந்த தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும், கவர்ச்சியான அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. இளைஞர்களின் நலனைப் பாதுகாக்கவே இந்த ஆன்லைன் விளையாட்டுத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது” என வாதம் வைத்துள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.